மேலும் 1000 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடல். கணக்கெடுக்கும் பணி தொடங்கியதுஜ்

மேலும் 1000 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடல். கணக்கெடுக்கும் பணி தொடங்கியதுஜ்

tasmacசமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்திருந்தார். இந்த வாக்குறுதியின்படி டாஸ்மாக் கடை திறக்கும் நேரம் காலை 10 மணியில் இருந்து 12 மணியாகவும், அடுத்தகட்டமாக 500 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. இதனால் 5% விற்பனை குறைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் அடுத்தட்ட நடவடிக்கையாக மேலும் 1000 கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் இது தொடர்பான ஆய்வுகளில் தமிழகத்தின் அனைத்து வட்டாட்சியர்களும் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதுகுறித்து டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அடுத்த கட்டமாக 1,000 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மூடவேண்டிய கடைகளை கணக்கெடுக்கும் பணிகளை வட்டாட்சியர்கள் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவின்பேரில் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட வட்டாட்சியர், நில அளவையர், ஆட்சியர் சார்பில் ஒரு பிரதிநிதி என 3 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள அனைத்து கடைகளுக்கும் செல்லும் இந்தக் குழுவினர், டாஸ்மாக் கடை எந்த இடத்தில் உள்ளது, அந்தக் கடையின் அருகே வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையம் உள்ளதா என்று ஆய்வு செய்கின்றனர். அருகில் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையம் ஆகியன இருந்தால், அவற்றுக்கும் டாஸ்மாக் கடைக்கும் எவ்வளவு தூரம் என்பதை அளந்து கொள்கின்றனர்.

இதுமட்டுமன்றி, அதிகம் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகளின் பட்டியலையும் காவல்துறை ஒத்துழைப்போடு கேட்டுப் பெறவுள்ளனர். அதன்பிறகு மாவட்ட ஆட்சியருக்கு வட்டாட்சி யர்கள் ஆய்வறிக்கை அனுப்புவார்கள். அவை டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அந்த அறிக்கையின்படி, அடுத்தகட்டமாக சுமார் 1,000 டாஸ்மாக் கடைகள் வரை மூடப்படும். இந்த கடைகள் அதிகபட்சம் 2 மாதங்களுக்குள் மூடப்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் மொத்தம் 6,800 டாஸ்மாக் மதுக்கடைகள் இருந்த நிலையில் 500 கடைகள் மூடப்பட்டதால் அதன் எண்ணிக்கை, 6,300 ஆக குறைந்துள்ளது. மேலும், 1,000 கடைகள் மூடப்பட்டால், டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை 5,300 ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply