டேட்டா காலியாகாமல் வீடியோ பார்ப்பது எப்படி?
வீடியோ தளமான யூடியூப் இந்தியப் பயனாளர்களுக்காக “Youtube Go” என்ற பெயரில் பீட்டா வெர்சன் (முன்னோட்டப் பதிப்பு) ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இன்டர்நெட் வேகம் குறைவான இடத்திலும் பயன்படுத்தப்படக் கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Youtube Go
இந்த பீட்டா வெர்சனை பரிசோதனை முயற்சியாக யூடியூப் தற்போது வெளியிட்டுள்ளது. டெஸ்ட்டர்களின் கருத்துகளைத் தெரிந்து கொண்டு, அதன் பின்னர் யூடியூப் தனது அப்ளிகேஷனில் படிப்படியாக மாற்றங்களைக் கொண்டுவரும். முதல் முறையாக இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தும் போது கூகுள் அக்கவுன்ட் மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை அளித்த பின்னரே லாகின் செய்ய முடிகிறது.
இணையம் பயன்படுத்தும் அனைவரும் குறைவான இன்டர்நெட் வேகத்தால் பலவித சிக்கல்களை எதிர்கொண்டிருப்பார்கள். ‘ஊருக்குப் போக நடந்துக்கிட்டே டிக்கெட் புக் பண்ண ஆரம்பிச்சேன். டிக்கெட் புக் ஆகுறதுக்குள்ள நடந்தே ஊருக்கு வந்து சேர்ந்துட்டேன்’ என்பது குறைவான இன்டர்நெட் ஸ்பீட் குறித்த பிரபலமான ட்விட்டர் வழக்கு. குறைவான இன்டர்நெட் வேகம் உள்ள இடங்களில் ப்ரெளஸ் செய்வதே கஷ்டம் என்ற நிலையில் வீடியோ பார்ப்பதும், டவுன்லோடு செய்வதும் நடக்காத காரியம். இதைக் கருத்தில் கொண்டுதான் யூடியூப் தற்போது இந்த பீட்டா வெர்சனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம், 2ஜி நெட்வொர்க் சேவையிலும் வீடியோவைப் பார்க்கவும், டவுன்லோடு செய்யவும் முடிகிறது. இதன் காரணமாக இந்தியாவில் யூடியூப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இதுகுறித்து, யூடியூப் நிறுவனம், ‘அடுத்த தலைமுறைக்கான வீடியோ தளமாக யூடியூப் செயலியை வடிவமைக்கும் பணி நடைபெற்றது. உலகின் மிகச் சிறந்த வீடியோ தளமாக விளங்கும் யூடியூப்பில் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டால்தான் நிலைத்து நிற்கும். இதையடுத்து, யூடியூப் கோ என்ற ஆப் இந்தியாவில் அறிமுகமாகிறது’ எனத் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்தியா மிகப்பெரிய சந்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஜியோ வருகைக்குப்பின், பல முன்னணி நெட்வொர்க் சேவை நிறுவனங்களும் அதிரடி விலைக்குறைப்பில் இறங்கியுள்ளன. இணையத்தின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் நெட்வொர்க் சேவையில் நாட்டின் பல இடங்களுக்கு 3ஜி சேவை இன்னும் முழுமையான அளவுக்குச் சென்றடையவில்லை. இதைக் கருத்தில் கொண்டுதான் ஃபேஸ்புக், ஸ்கைப் போன்ற நிறுவனங்கள் பீட்டா வெர்சன்களை முன்னரே அறிமுகம் செய்திருக்கின்றன.
யூடியூப் கோ – வடிவமைப்பு
யூடியூப் கோ – சிறப்பம்சங்கள் :
1. அப்ளிகேஷனின் அளவு 10 எம்.பி-க்கும் குறைவு என்பதால் மொபைல் மெமரியில் குறைவான இடத்தையே எடுத்துக் கொள்ளும். இதனால் மொபைல் ஹேங்க் ஆகும் எனக் கவலை அடைய வேண்டியதில்லை.
2. வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்து பார்க்கவும், டவுன்லோட் செய்யவும் ஆப்சன்கள் இருக்கின்றன. இன்டர்நெட் ஸ்பீடைப் பொறுத்து நமக்கு விருப்பப்பட்டதைத் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், அனைத்து வீடியோக்களும் பேசிக் குவாலிட்டி மற்றும் ஸ்டேண்டர்டு குவாலிட்டி என இருவகைகளில் கிடைப்பதால், டேட்டாவை சிக்கனப்படுத்த முடியும்.
3. ‘ஹோம்’ பக்கத்தில் நமக்கேற்ப வீடியோ பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு வீடியோவின் முன்னோட்டத்தையும் இதில் பார்த்துக் கொள்ள முடிகிறது.
4. எந்தவொரு வீடியோவையும் நாம் ‘சேவ்’ செய்து வைத்துக் கொள்ளலாம். சேவ் செய்த வீடியோவை இணையம் இல்லாத போதும் எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு ரசிக்கலாம்.
5. சேவ் செய்த வீடியோக்களை நண்பர்களுடன் உடனுக்குடன் பகிர்ந்துகொள்ள முடியும். வைஃபை டேரக்ட் முறையில் வீடியோ அனுப்பப்படும் என்பதால், டவுன்லோடு செய்த வீடியோக்களை டேட்டா இல்லாத நேரத்திலும் அனுப்பிக் கொள்ளலாம். ஆனால் ‘யூடியூப் கோ’ மூலம் வீடியோவைப் பெற நினைப்பவரும் இந்த பீட்டா அப்ளிகேஷன் வைத்திருக்க வேண்டும்.
6. ஆங்கிலம் மட்டுமில்லாமல் தமிழ் போன்ற 7 பிராந்திய மொழிகளிலும் ‘யூடியூப் கோ’ அப்ளிகேஷனைப் பயன்படுத்த முடியும். ஜெல்லி பீனுக்கு முந்தைய ஆண்ட்ராய்டு வெர்சன்களிலும் ‘யூடியூப் கோ’ வேலை செய்யும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
டவுன்லோடு லிங்க் : https://play.google.com/store/apps/details?