10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 96.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
10ஆம் வகுப்பு என்னும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை நடந்த நிலையில் இன்று இந்த தேர்வு முடிவு காலை 9.30 மணிக்கு இணையதளங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமும் தேர்வு முடிவு அனுப்பப்படுகிறது.
இந்த ஆண்டு பள்ளி மாணாக்கராகவும், தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 10,01,140. பள்ளி மாணாக்கராய் தேர்வெழுதியோர் 9,50,397. மாணவியரின் எண்ணிக்கை 4,76,057. மாணவர்களின் எண்ணிக்கை 4,74,340.
ஒட்டுமொத்தத்தில் 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 96.4 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 92.5 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 3.9 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12336. இவற்றில் மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 7083. உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5253. மொத்தம் 5584 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 5456 அரசுப் பள்ளிகளில் 1687 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. #SSLCResult