கும்பகோணம் பகுதியில் 11 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகாமக விழா
கும்பகோணத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகவிழா வருகிற பிப்ரவரி 13-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி 22-ந் தேதி நடக்கிறது. இதைமுன்னிட்டு மகாமக விழா தொடர்புடைய 12 சிவன் கோவில்கள் மற்றும் 5 வைணவ கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அத்துடன் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கியமான கோவில்களும் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 11 கோவில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பகோணம் மேலக்காவேரி பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 1,300 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை 8.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் உபயதாரர்கள் கேப்டன் சியாம்சுந்தர், பாலசுப்ரமணியன், சிவசுப்ரமணியன், கல்யாணம், கல்யாணராமன் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அசோக்குமார், ஆய்வாளர் மதியழகன் ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல 90 ஆண்டுக்கு பிறகு கும்பகோணம் மல்லுகசெட்டித்தெருவில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணர் கோவில்
மற்றும் எல்லையம்மன் கோவில், பெரிய கடைத்தெருவில் உள்ள சரநாராயண பெருமாள் கோவில், ,தாராசுரம் முனியாண்டி கோவில், மேலக்காவேரி யானையடி அய்யனார் கோவில் மற்றும் பி¢ள்ளையார்கோவில், மாதுளம்பேட்டை காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களிலும் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முல்லைவனநாதர் கோவில்
பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையுடனான முல்லைவனநாதர் கோவிவில் நேற்று காலை 9-20 மணிக்குஅம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் மூலவர் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அம்மன் மற்றும் சாமி வெள்ளி வாகனத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. முன்னதாக 4 கால யாக பூஜைகள், கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அறநிலையத்துறை (திருப்பணி)கூடுதல் ஆணையர் கவிதா, ஆலங்குடி உதவி ஆணையர் சாத்தையா, திருவாரூர் உதவி ஆணையர் சிவராம்குமார், நடிகை ஸ்ரீபிரியா, எம்.எல்.ஏ.க்கள் ரெங்கசாமி, துரைக்கண்ணு, அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சூரியநாராயணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கொத்தங்குடி செங்குட்டுவன், இடையிருப்பு கார்த்திகேயன், மேலசெம்மங்குடி முருகானந்தம், கூட்டுறவு வங்கித்தலைவர் முருகானந்தம் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ஜெயபால் மேற்பார்வையில் கோவில் ஊழியர்கள் மற்றும் உபயதாரர்கள், கிராம மக்கள் செய்து இருந்தனர்.
தேனுபுரீஸ்வரர் கோவில்
இதேபோல கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 9.45 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ஞானசேகரன், முன்னாள் எம்.பி. ஓ.எஸ்.மணியன், சிட்டி யூனியன் வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல பழையாறை சோமநாத சுவாமி கோவிலில் நேற்று காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது