கடந்த 2004ஆம் நடந்த கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமக தீயில் கருகி பலியாகினர். அந்த வழக்கில் இன்று தஞ்சாவூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.அதன்படி கைது செய்யப்பட்ட 24 பேர்களில் 11 பேர்களை விடுதலை செய்து தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருந்து கடந்த 2006ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் 488 பேரை சாட்சிகளாக காவல்துறையினர் சேர்த்திருந்தனர். விசாரணைக்கு பின்னர் 3,126 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி எம்.பழனிசாமி, தாசில்தார் பரமசிவம், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணன் ஆகியோரை ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் விடுவித்திருந்தது. ஆனால் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன் தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சுப்ரிம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது.
10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகமது அலி, 11 பேரை விடுதலை செய்துள்ளார். மேலும் பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அவரது மனைவியும் பள்ளியின் தாளாளருமான சரஸ்வதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், மேலும் 8 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.