சுவிஸ் நாட்டில் உள்ள HSBC வங்கியில் கணக்கு வைத்துள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பட்டியலை அந்நாட்டு ஊடகம் ஒன்று பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது. இதில் 1,195 பேர் இந்தியர்கள் என்பதும், அவர்களில் பெரும்பாலானோர் பிரபலமான தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, நரேஷ் குமார் கொயல், அனுராக் டால்மியா, உள்பட பல இந்தியர்களின் பெயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
சுவிஸ் நாட்டில் வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலில் இருக்கும் இந்தியர்களின் பெயர்களையும், அவர்களது வங்கிக் கணக்கு விவரங்களையும் ஆய்வு செய்து விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கருப்புப் பணம் குறித்து விசாரணை செய்ய உச்சநீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு இன்று அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.