இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை 13 வயதில் ஏறி சாதனை படைத்திருக்கிறார் ஆந்திராவை சேர்ந்த சிறுமி ஒருவர். அவருக்கு வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிந்து வருகிறது.
ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி மலாவத் பூர்ணா. இவர் தற்போது 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் இவருடன் படிக்கும் மாணவர் ஆனந்த் ஆகிய இருவரும் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளனர்.
இருவரும் இணைந்து 53 நாட்கள் மலைப்பகுதியின் அபாயகரமான பகுதிகளில் பயணம் செய்து இந்த சாதனையை நேற்று காலை 6 மணிக்கு இருவரும் செய்துள்ளனர். உலகிலேயே எவரெஸ்ட் சிகரத்தை மிகக்குறைந்த வயதில் ஏறி சாதனை படைத்த பெண் என்ற பெருமையை மலாவத் பூர்ணா பெற்றுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள பிரபலமான மலையேற்றக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, இந்திய சீன எல்லைப்பகுதியில் உள்ள மலையில் ஏறி பயிற்சி பெற்ற பின்னர் இந்த சாதனையை பூர்ணா செய்துள்ளார்.
உலக சாதனை செய்த பூர்ணாவை ஆந்திர மாநிலத்தின் அரசியல் தலைவர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அவர் ஆந்திரா திரும்பியவுடன் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என தெரிகிறது.