பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா உயர்நீதிமன்றம் சமீபத்தில் விடுத்த ஒரு எச்சரிக்கையில் “போலி கல்விச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்கள் அனைவரும் வரும் 8ஆம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து தங்கள் பணியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்திருந்தது.
நீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து நேற்று ஒரே நாளில் 1,400 ஆசிரியர்கள் ராஜினாமா செய்திருப்பதாகவும், இன்னும் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
பிஹார் மாநிலத்தில் பணிபுரியும் சுமார் 3.5 லட்சம் ஆசிரியர்களில் பலர் போலி கல்விச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்திருப்பதாக ரஞ்சித் பண்டிட் என்பவர் பாட்னா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு வழக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி நரசிம்ம ரெட்டி, சுதிர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு சமீபத்தில் இந்த எச்சரிக்கையை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்கள் ராஜினாமா செய்தது குறித்து கருத்து கூறியுள்ள மாநில கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.கே.மகாஜன் கூறியதாவது:
உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இதுவரை 1,400 ஆசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். வரும் நாட்களில் மேலும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பணியை விட்டு விலகுவார்கள் என்று தெரிகிறது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் போலி ஆசிரியர்கள் பணியை விட்டு விலகாவிட்டால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போலீஸ் விசாரணை நடைபெறும். பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதோடு இதுவரை பெற்ற ஊதியம், இதர சலுகைகளும் திரும்பப் பெறப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.