ஜம்மு-காஷ்மீரில் இயல்புநிலை திரும்புகிறது.144 தடை உத்தரவு நீக்கம்
ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் புர்கான வானி சமீபத்தில் இந்திய படையினர்களால் கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வன்முறை அதிகரித்து வந்தது. இதில், 2 போலீஸ்காரர்கள் உட்பட 47 பேர் கொல்லப்பட்டனர், 5500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஷ்மீர் வன்முறையைக் கட்டுப்படுத்த கடந்த 9ஆம் தேதியிலிருந்து காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 17 நாட்கள் அமலில் இருந்த இந்த தடையுத்தரவு நேற்று நிலைமை ஓரளவுக்கு சீரானதை அடுத்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “அனந்த்நாக் நகரைத் தவிர காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டது. எனினும், சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்துவதற்காக சில பகுதிகளில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
ஆனால் மொபைல் சேவைகள், இணையம், ரயில் சேவைகள் ஆகியவை இன்னும் தொடங்கவில்லை. மேலும் பிரிவினைவாதிகள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.