அமெரிக்க அரசு நிறுவனங்கள் கதவடைப்பு

அவசர நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், அரசு  நிதி தொடர்பாக அவசர முடிவுகளை ஒபாமா எடுத்தார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், திட்டப்பணிகள், தேசிய இடங்கள் பராமரிப்பு, வெப்சைட்கள் பராமரிப்பு போன்றவற்றை நிதி பற்றாக்குறை காரணமாக நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் நாள் பல அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. அதுபோல, வாஷிங்டன், நியூயார்க் உட்பட பல மாநிலங்களில் உள்ள தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மூடப்பட்டன. ஊழியர்கள் காலவரையற்ற விடுப்புக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் மதியத்துக்கு மேல் பலரும் தங்கள் லேப்டாப்களை எடுத்து கொண்டு வீடு திரும்பினர். முதியோர் காப்பகங்களும் மூடப்பட்டன. அவர்களுக்கு மாநில அரசு நிதி மட்டும் கிடைத்தது. மருத்துவ வசதிகளும் குறைக்கபப்ட்டன. பல இடங்களில் குப்பை அள்ளுவதும் பாதிக்கப்பட்டது.

எல்லை பாதுகாப்பு, விமான போக்குவரத்து கட்டுப்பாடு, உணவு துறை போன்ற பணிகளில் பாதிப்பில்லை. அந்த பணிகளில் உள்ள ஊழியர்கள் வேலைக்கு வந்தனர். பாஸ்போர்ட், விசா பணிகளும் கூட பெரிய அளவில் பாதிக்கவில்லை. மத்திய அரசின் ஊழியர்கள் எண்ணிக்கை 24 லட்சம். அதில் மூன்றில் ஒரு பங்கான 8 லட்சம் பேர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரண்டாவது நாளாக நேற்று வேலைக்கு வரவில்லை. எனினும், ஒபாமாவின் சுகாதார காப்பீடு திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வாங்கும் பணிகள்  1ம் தேதியில் இருந்து திட்டமிட்டபடி தொடங்கின.

கடந்த 2 நாளில் மட்டும் அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் முடக்கம், தேசிய பொது இடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் இயங்காததால் மட்டும் 200 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், கதவடைப்பை முடிவுக்கு கொண்டு வர எந்த தரப்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பரஸ்பரம் இரு கட்சிகளும் குற்றம்சாட்டுவதில் ஈடுபட்டுள்ளன. ‘நாங்கள் கதவடைப்பை விரும்பவில்லை. திட்டமிட்டு அரசு தான் செய்துள்ளது’ என்று குடியரசு கட்சி சொன்னது. ‘மக்களை பாதிக்கும் வகையில் நிதி மசோதாவை நிறுத்திய செயலுக்கு குடியரசு கட்சி பதில் சொல்லியாக வேண்டும்’ என்று ஜனநாயக கட்சி குற்றம்சாட்டியது.

வனவிலங்கு பூங்காவில் குவிந்த பெண்கள், குழந்தைகள் எல்லாம் திருப்பி அனுப்பப்பட்டனர். அதுபோல, அவசர தேவையற்ற நிர்வாக பணிகள் கவனிக்கும் பல அலுவலகங்கள், அரசு ஏஜன்சிகள் ஆகியவையும் சம்பளம், பராமரிப்பு நிதி ஒதுக்காததால் மூட அறிவுறுத்தப்பட்டன. இது போன்ற  அரசு பணிகள் முடங்கின. ஊழியர்கள் எல்லாரும் பிரச்னை தீரும் வரை ஆபீஸ் வர வேண்டாம் என்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பெடரல் அரசு பணிகள் தான் முடங்கின. வெள்ளை மாளிகையில் அதிபர் ஆபீஸ் பணிகளும் கூட முடங்கின. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. வெறும் 1,200 பேர் மட்டும் முக்கிய பணிகளை கவனித்தனர்.

பாஸ்போர்ட், விசா பணிகள், தூதகர பணிகள் போன்றவை பாதிக்கவில்லை. மேலும், பாஸ்போர்ட், விசா ஆகியவற்றில் கட்டண வருவாய் இருப்பதால் அந்த பணிகளை கவனிக்கும் பணியாட்கள் வழக்கம் போல பணிக்கு வந்தனர் என்று என்பிசி செய்தி கூறியுள்ளது.

Leave a Reply