தேமுதிக தலைமையில் 15 கட்சிகள். அதிர்ச்சியில் திமுக….

தேமுதிக தலைமையில் 15 கட்சிகள். அதிர்ச்சியில் திமுக….
vijayakanth
தேமுதிக தனித்து போட்டி என விஜயகாந்த் அறிவிப்பு செய்ததும் முதலில் அதிர்ச்சி ஏற்பட்டது திமுகவுக்குத்தான். அதிமுகவை வீழ்த்த கண்டிப்பாக காங்கிரஸ் உடனான கூட்டணி போதாது என்று திமுக மேலிடத்தலைவர்களுக்கே நன்றாக தெரியும்.  இந்நிலையில் விஜயகாந்தின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் திமுகவுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது தேமுதிக

அதாவது தனித்து போட்டி என்று கூறினாலும், கேப்டன் தலைமையை ஏற்பவர்களுடன் கூட்டணி என்று பிரேமலதா அறிவித்துள்ளதால், சிறிய கட்சிகளும், மக்கள் நலக்கூட்டணியும் தேமுதிகவுடன் இணைய முயற்சி செய்து வருகின்றன. நேற்று வைகோ உள்ளிட்ட தலைவர்கள் மக்கள் நலக்கூட்டணியை விஜயகாந்த் அணியுடன் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

மேலும் திமுக, அதிமுகவால் ஒதுக்கப்பட்ட மற்ற கட்சிகளும் தேமுதிகவுக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும், இப்போதைக்கு சுமார் 15 கட்சிகள் தேமுதிகவுடன் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. தேமுதிகவில், மக்கள் நலக்கூட்டணி, தமாக, புதிய தமிழகம், பாரிவேந்தர் தலைமையிலான  இந்திய ஜனநாயகக் கட்சி, புரட்சி பாரதம்,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இணையலாம் என்றும் கூறப்படுகிறது.

அதிமுக, திமுக அல்லாத கட்சிகளில் பாஜக, பாமக தவிர மீதி அனைத்து கட்சிகளும் இணையும் பட்சத்தில் அதிமுகவுக்கு சவாலான ஒரு கூட்டணி உருவாக வாய்ப்பு இருக்கின்றது. இந்த கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும் எதிர்க்கட்சியாக உருவாகினாலே மிகப்பெரிய வெற்றியாகத்தான் கருதப்படும்

கடந்த தேர்தலிலேயே எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த திமுக, தேமுதிக தலைமையில் வலுவான கூட்டணி உருவானால் இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறுகின்றனர். இன்னும் தேர்தலுக்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் அடுத்த என்னென்ன அரசியல் திருப்பங்கள் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply