விருதுகளை திருப்பி கொடுத்த இந்திய எழுத்தாளர்களுக்கு 150 நாடுகளின் எழுத்தாளர்கள் ஆதரவு

விருதுகளை திருப்பி கொடுத்த இந்திய எழுத்தாளர்களுக்கு 150 நாடுகளின் எழுத்தாளர்கள் ஆதரவு
writers
இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் கருத்து சுதந்திரம் குறைந்துவிட்டதாகவும், மதசகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் வரிசையாக கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி உள்பட தாங்கள் வாங்கிய விருதுகளை திருப்பியளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய எழுத்தாளர்களின் இந்த முடிவுக்கு உலகில் 150 நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பென் இன்டர்நேஷனல்’ எழுத்தாளர்கள் சம்மேளனத்தின் 81-வது மாநாடு கனடாவில் உள்ள கியூபெக் நகரில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டில் 150 நாடுகளின் எழுத்தாளர்கள் இணைந்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், எழுத்தாளர்கள் கல்பர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோரை கொன்றவர்களை கண்டுபிடித்து இந்திய அரசு கைது செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிக உயர்ந்த சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற கல்பர்கி உள்ளிட்ட எழுத்தாளர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் திருப்பி அனுப்பிவரும் நிலையில் சாகித்ய அகாடமி அமைப்பு மவுனமாக உள்ளது. இந்திய அரசை சேர்ந்த இரு மந்திரிகள் விருதுகளை திருப்பி அளிக்கும் எழுத்தாளர்களின் உள்நோக்கத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக எங்கள் (’பென் இன்டர்நேஷனல்’ சம்மேளனம்) கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என விருதுகளை திருப்பி அளித்தவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்விவகாரத்தில் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் தொடர்பாக மாறுபட்ட கருத்துகளை மந்திரிகள் தெரிவித்து வருவதை இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, இந்திய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் ’பென் இன்டர்நேஷனல்’ சம்மேளனத்தின் தலைவர் ஜான் ரால்ஸ்டன் சால் கடிதம் எழுதியுள்ளார்.

தங்களது விருதுகளை திருப்பி அளித்த நாவலாசிரியர்கள், கவிஞர்கள் மற்றும் கல்வியாளர்களின் முடிவுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். எழுத்தாளர்கள் உள்ளிட்ட கலைஞர்களின் உரிமையை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply