கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் என்ற கிராமத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்த சுமார் 150 ஆடுகள், ரயில் மோதியதால் பலியாகி உள்ளன.
கும்பகோணத்தில் அருகேயுள்ள திருவிடைமருதூர் என்ற கிராமத்தில் சந்தானம் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் இணைந்து சுமார் 350 செம்மறி ஆடுகளை பண்ணையில் வளர்த்து வந்தனர். அவர்கள் தங்கள் ஆடுகளை திருவிடைமருதூர் பகுதியில் அறுவடை செய்த வயல்களில் பட்டி அமைத்து ஆடுகளை மேய்த்து வருவது வாக்கம்.
நேற்றிரவு மழை பெய்ததால் வயலில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் பட்டியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கீழே விழுந்துள்ளது. இதனால், செம்மறி ஆடுகள் அனைத்தும் பட்டியில் இருந்து வெளியேறி வெவ்வேறு இடங்களில் மேயத்தொடங்கியது. சில ஆடுகள் மேய்ந்துவிட்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் படுத்துவிட்டன.
இந்நிலையில், இன்று அதிகாலை கும்பகோணம்-மயிலாடுதுறை வழித் தடத்தில் சென்ற பாசஞர் ரயில் ஒன்று தண்டவாளத்தில் படுத்திருந்த ஆடுகள் மீது மோதியதால் அந்த ஆடுகள் அனைத்தும் உயிரிழந்தன. இந்த விபத்துக்கள் சுமார் 150 ஆடுகள் பலியானதானவும் அவற்றின் மதிப்பு சுமார் ரூ.11 லட்சம் என்றும் கூறப்படுகிறது.