நிறவெறிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மரணம் அடைந்தார். 15ஆம் தேதி நடைபெறும் அவரது இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
உலக வரலாற்றில் தன் பெயரை பொன்னெழுத்துகளால் பொறித்துக்கொண்ட மகத்தான தலைவர் நெல்சன் மண்டேலா. அமைதிக்கான ‘நோபல் பரிசு’ பெற்ற இவர், தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பர் இன அதிபர்.
மண்டேலா ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள தனது வீட்டில் உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. அவரது மரணச்செய்தி உலகமெங்கும் உள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவும், துயரமாகவும் அமைந்தது.
மண்டேலா உடல்நலக்குறைவால் கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும், வீடு திரும்புவதுமாக இருந்தார். கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி நுரையீரல் தொற்றுநோய் காரணமாக தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து உயிருக்கு போராடி வந்த அவர், மரணத்தின் விளிம்புவரை சென்று, 3 மாத சிகிச்சையில் ஓரளவு சுகம் பெற்றார்.
கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு வீட்டில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆனது. இந்த நிலையில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலையில் அவரது உயிர் அமைதியாக பிரிந்தது.
நெல்சன் மண்டேலாவின் மறைவுச்செய்தியை அந்த நாட்டின் அதிபர் ஜேக்கப் ஜூமா முறைப்படி அறிவித்தார். இதுதொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், “நமது அன்புக்குரியவரும், தென் ஆப்பிரிக்க ஜனநாயகத்தின் நிறுவனர் அதிபருமான நெல்சன் மண்டேலா காலமானார். அவர் இப்போது நிரந்தரமாக ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் இப்போது அமைதியாக இருக்கிறார். நமது தேசம், அதன் மிகப்பெரிய புதல்வரை இழந்து விட்டது. நமது மக்கள் தங்கள் தந்தையை இழந்து விட்டனர்” என்றார்.
தொடர்ந்து அவர், “மண்டேலாவின் ஓய்வில்லா விடுதலைப்போராட்டம், அவருக்கு உலகமெங்கும் மதிப்பை தேடித்தந்தது. அவரது பணிவு, கருணை, மனிதநேயம் ஆகியவை மக்களின் அன்பைப் பெற்றுத்தந்தது. நமது சிந்தனையெல்லாம், உலகமெங்கும் மண்டேலாவை தங்களது சொந்தத் தலைவராக, அவரது நலனை தங்கள் நலனாக கொண்ட கோடானகோடி மக்களுடன் கலந்திருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மண்டேலாவின் மறைவுக்கு உலக தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து, அவரது வாழ்நாள் சேவைக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.
நெல்சன் மண்டேலாவின் உடல் ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு உடல் பதப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள யூனியன் கட்டிடத்தில் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் அணி, அணியாக சென்று தங்கள் உள்ளம் கவர்ந்த தலைவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மண்டேலாவின் இறுதிச்சடங்கு 15ஆம் தேதி, அவரது சொந்த கிராமமான குலுவில் நடத்தப்படும் என தகவல்கள் கூறுகின்றன. இதில், உலகமெங்கும் உள்ள தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்தியாவின் சார்பிலும் உயர்மட்ட குழுவினர் பங்கேற்கிறார்கள்.
மண்டேலாவின் ஆன்மா அமைதி பெறுவதற்காக, நாட்டு மக்கள் அனைவரும் 8ஆம் தேதி பிரார்த்தனையில் ஈடுபடுமாறு தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா கேட்டுக்கொண்டுள்ளார்.
மறைந்த தலைவர் மண்டேலாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டேலாவின் இறுதிச்சடங்கு நடந்து முடிகிற வரை தென் ஆப்பிரிக்காவில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்; 10 நாள் அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டேலாவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக அந்த நாட்டு அரசு, சிறப்பு இணையதளம் ஒன்றினை உருவாக்கி உள்ளது.
அவரது வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘மண்டேலா, விடுதலைக்கு நீண்ட நடை’ என்ற சினிமா படம் கடந்த வாரம்தான் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தை இந்திய வம்சாவளி தென் ஆப்பிரிக்க இயக்குனர் ஆனந்த் சிங் 20 ஆண்டுகளாக தயாரித்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.