ரூ.1.60 கோடி செலவில் 16 அம்மா மருந்தகங்கள். முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

amma marundhagamகடந்த சனிக்கிழமை மீண்டும் ஐந்தாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா நேற்று அம்மா உணவகம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் ரூ.1.60 கோடி செலவில் 8 மாவட்டங்களில் 16 அம்மா மருந்தகங்கள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது: “தமிழக மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் கூட்டுறவுத் துறையால் முன் முயற்சியாக 100 அம்மா மருந்தகங்கள் புதியதாகத் தொடங்கிடவும், இதற்காக 20 கோடி ரூபாய் மாநில விலை நிலைப்படுத்தும் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, முதல்வர் ஜெயலலிதா 26.6.2014 அன்று காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 10 இடங்களில் தலா 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 அம்மா மருந்தகங்களைத் திறந்து வைத்தார்.

தற்போது தமிழகத்தில் 84 அம்மா மருந்தகங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இம்மருந்தகங்களில் தரமான மருந்துகள் 15 சதவீதம் வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் அம்மா மருந்தகங்கள் பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 26.6.2014 முதல் 16.5.2015 வரை 84 அம்மா மருந்தகங்கள் மூலம் 12 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஏழை எளிய நடுத்தர மக்கள் குறைந்த விலையில் மருந்துகளை பெற்று பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மருந்தகங்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், வேலாண்டிபாளையம் நகரக் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் கீழ் வேலாண்டிபாளையத்தில், 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மருந்தகத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மேலும், கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் கவுண்டன்பாளையம், கோயம்புத்தூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர் கூட்டுறவுப் பண்டகசாலை, பொள்ளாச்சி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, உப்பிலிபாளையம் நகர கூட்டுறவு கடன் சங்கம்;

திண்டுக்கல் மாவட்டம், பழனி கூட்டுறவு விற்பனைச் சங்கம் மற்றும் கொடைக்கானல் கூட்டுறவு பண்டகசாலை; கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை; புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகர கூட்டுறவு பண்டகசாலையின் கீழ் புதுக்கோட்டை மற்றும் விராலிமலை; சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்;

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம்; தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்; திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் மற்றும் உடுமலைபேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம்; என மொத்தம் 16 இடங்களில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 16 அம்மா மருந்தகங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

அம்மா மருந்தகங்கள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட் போன்ற மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தகங்களில் உயிர்காக்கும் மருந்துகளை சிறப்பாகப் பாதுகாக்கும் வகையில் குளிர்சாதனப் பெட்டி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கணினி பயிற்சி பெற்ற விற்பனையாளர்களோடு மருந்தாளுநர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply