பெரு நாட்டின் தென்கிழக்கு மலைப்பகுதியில் 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மிக வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 3000 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதால் சம்பவ இடத்திலேயே 16 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரு நாட்டின் அயாகுச்சோ என்றா பகுதியில் அமைந்துள்ள சாஞ்செஸ் நெடுஞ்சாலையில், நஸ்கா நகரிலிருந்து பிக்குயோ நகருக்கு ஒரு பேருந்து வேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை திடீரென அந்த பேருந்து இழந்ததால் சில மீட்டர்கள் தாறுமாறாக ஓடிய பேருந்து 3000 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்து குறித்த தகவலை அந்த சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் நெடுஞ்சாலை காவல்துறை தலைவருக்கு தகவலை அனுப்பினார். உடனடியாக மீட்பு படையினர் விரைந்து வந்து பேருந்தில் காயம் அடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் 16 பேர் பலியானதாகவும், 49 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் விபத்து நடந்த பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மீட்பு பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.