அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு, 16 மாத இடைவெளிக்கு பிறகு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நேற்று, கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்வர் ஜெயலலிதா, 2014 ஆகஸ்ட் மாதம், கட்சியின் பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டார். அதையொட்டி, ஆக., 29ம் தேதி, கட்சி அலுவலகத்திற்கு வந்து, தொண்டர்கள் மத்தியில் பேசினார்; அதன் பின், வரவில்லை.
விழுப்புரம் தெற்கு, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள, அ.தி.மு.க., அலுவலகத்தை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் திறந்து வைப்பதற்காக, நேற்று ஜெயலலிதா, சென்னை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள, கட்சி தலைமை
அலுவலகம் வந்தார்.
அவரை வரவேற்க, வழிநெடுகிலும் பேனர்கள் வைத்திருந்தனர். காலை, 10:50 மணிக்கு வந்த முதல்வருக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, வரவேற்பு அளிக்கப்பட்டது.
மகளிர் அணியினர், பூரண கும்பம் ஏந்தி வரவேற்றனர். நிகழ்ச்சி முடிந்து, 11:15 மணிக்கு, புறப்பட்டு சென்றார். அவரது வருகையை ஒட்டி, கட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலையில், காலை முதல், வாகனங்களை போலீசார் அனுமதிக்கவில்லை.