சென்னை,163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. சென்னை,
163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 5ம் தேதி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதற்கான தரவரிசை பட்டியலை அந்தந்த கல்லூரிகள் தங்களுடைய இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ., பி.சி.ஏ. உள்ளிட்ட படிப்புகளில் இருக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களுக்கு, கிட்டதட்ட 4 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில் கட்டணம் செலுத்தி, முழுமையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். அந்தவகையில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 பேர், இந்த 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களுக்கு தகுதியானவர்களாக கருதி, அவர்களுக்கான இறுதி தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
நாளை கலந்தாய்வு தொடக்கம் இந்த மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கல்லூரிகள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களை எந்தெந்த தேதியில் கலந்துகொள்ளவேண்டும்? என்று விண்ணப்பித்தபோது சமர்ப்பித்திருந்த செல்போன் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பிவருகின்றனர். அதன் அடிப்படையில் மாணவ-மாணவிகளுக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட உள்ளன.
கலந்தாய்வில் கலந்துகொள்ள வரும்போது என்னென்ன ஆவணங்கள் எடுத்துவரவேண்டும் என்பது போன்ற விவரங்கள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை சில கல்லூரிகள் இணையதளத்தில் வெளியிட்டிருக்கின்றன.
அதன்படி, சென்னையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், “பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், 10, 11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், வகுப்பு சான்றிதழ், மருத்துவ சான்றிதழ், ஆதார் கார்டு, சிறப்பு பிரிவுக்கு விண்ணப்பித்திருந்தால் அதற்கான சான்றிதழ், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்” எடுத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் கட்டாயம் கொரோனா தொற்றுக்கு மத்தியில் கலந்தாய்வு நடப்பதால், கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள், அவர்களுடன் வருபவர்கள் முககவசம் கட்டாயம் அணிந்து வருவதோடு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளனர்.
அரசு கலை கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. அதுதவிர நூலக கட்டணம் உள்பட இதர கட்டணங்கள் அந்த கல்லூரிகள் இணைந்திருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு செலுத்தவேண்டும். அந்தவகையில் ஒரு குறிப்பிட்ட கட்டணம் மாணவ-மாணவிகளிடம் வசூலிக்கப்பட உள்ளது. விண்ணப்பித்தவர்களில் சிலர் தனியார் கல்லூரிகளில் அவர்களுக்கு விருப்பப்பட்ட பாடப்பிரிவு கிடைத்து, சேர்ந்திருக்க வாய்ப்புள்ளது. அவர்களைத்தவிர மீதமுள்ளவர்கள்தான் இந்த கலந்தாய்வில் பங்குபெறுவார்கள் என்றும், அவ்வாறு கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு ஏற்றவாறு கூடுதல் இடங்கள் தேவைப்பட்டால் அரசு முடிவுசெய்து அறிவிக்கும் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.