சென்னையில் நடந்த சிறப்பு பாஸ்போர்ட் மேளா. ஒரே நாளில் 1700 பேர்களுக்கு பாஸ்போர்ட்.

passportமண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு பாஸ்போர்ட் மேளாவில் ஒரே நாளில் 1,700 பேருக்கு பாஸ்போர்ட்டுகள் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ‘ஆன்-லைன்’ மூலம் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தவர்களுக்கும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுலா போன்ற பல்வேறு காரணங்களுக்காக பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் கோரி பலர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் அவ்வப்போது பாஸ்போர்ட் மேளா நடத்தப்படும். சமீபத்தில் நடைபெற்ற  சிறப்பு பாஸ்போர்ட் மேளாவில் ஒரே நாளில் 1,700 பேருக்கு பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டதாக பாஸ்போர்ட் மண்டல அதிகாரி செந்தில்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:

“பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப் பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விண்ணப்பங்கள் தேக்கமடைவதை தடுக்கவும், பொது மக்களுக்கு விரைவாக பாஸ்போர்ட் வழங்குவதற்காகவும் எங்கள் அலுவலகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, அமைந்தகரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரத்தில் பாஸ்போர்ட் சேவை மையங்களில் சிறப்பு மேளாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த நவ.1-ம் தேதி நடத்தப்பட்ட சிறப்பு மேளாவில், ஒரே நாளில் 1,700 பேருக்கு பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன.

மேலும், ‘ஆன்-லைன்’ மூலம் நேர்காணலுக்கு அனுமதி பெறுவதற்கான எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனிமேல் நாள் ஒன்றுக்கு 1,850 பேருக்கு பதிலாக 2,080 பேருக்கு அனுமதி வழங்கப்படும். இதேபோல், ‘தட்கல்’ முறையில் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 110-லிருந்து 180 ஆக உயர்த் தப்பட்டுள்ளது. இப்புதிய முறை கடந்த 3-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னையைத் தவிர, மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் வார இறுதி நாட்களில் சிறப்பு மேளாக்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக நவ.8 மற்றும் 9-ம் தேதிகளில் பாண்டிச்சேரியிலும், நவ.15 மற்றும் 16-ம் தேதிகளில் கடலூரிலும் சிறப்பு மேளாக்கள் நடத்தப்படுகின்றன. பாண்டிச்சேரியில் நடத்தப்படும் சிறப்பு மேளாவில் 200 விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு செந்தில் பாண்டியன் கூறினார்.

Leave a Reply