பென்னிக்குக் 175–வது பிறந்தநாளை முன்னிட்டு 175 பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
முல்லைபெரியாறு அணையை கட்டிய பென்னிக்குக்கின் பிறந்தநாள் விழா ஜனவரி 15–ந்தேதி தேனி மாவட்ட மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் 175–வது பிறந்தநாள் விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. சுருளிபட்டி பென்னிக்குக் ஆற்றுப்பாலத்தில் 175 பானைகளில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இதேபோல உத்தமபாளையம் அருகில் உள்ள பாலார்பட்டியில் இருந்து 100–க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்தனர். பென்னிக்குக் மணிமண்டத்தில் பல்வேறு அரசியில் கட்சியினர், முல்லைபெரியாறு அணை மீட்புக்குழு மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பென்னிக்குக் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழாக்கோலம் பூண்டிருந்தது. பென்னிக்குக் மணிமண்டபத்தில் முல்லைபெரியாறு மீட்புக்குழு தலைவர் ரஞ்சித்குமார், கூடலூர் அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் செங்குட்டுவன், வக்கீல்கள் பார்த்திபன், சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
உத்தமபாளையம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அமைந்துள்ள பென்னிக்குக் சிலைக்கு அ.தி.மு.க மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையிலும், தி.மு.க எம்.எல்.ஏ கம்பம் ராமகிருஷ்ணன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பல்வேறு கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நேற்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் பென்னிக்குக் பெயர் சூட்டப்பட்டது.