4 தபால் தலைகளின் மதிப்பு ரூ.4 கோடி. 70 வருடங்களுக்கு பின்பும் மதிப்பு குறையாத மகாத்மா
கடந்த 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் உருவம் பொதித்த ரூ.10 மதிப்புள்ள தபால் தலை வெளியானது. மிக அரியவகை தபால்தலையான காந்தி தபால்தலை மொத்தம் 13 மட்டுமே புழக்கத்தில் உள்ளது. அவற்றில் 4 அஞ்சல் தலைகள் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் ராயல் தபால் சேகரிப்பு தொகுப்பில் உள்ளன.
மீதியுள்ள தபால்தலைகளில் நான்கு தபால்தலைகள் ஒரே தாளாக சேர்ந்து உள்ளது. இந்த 4 தபால்தலைகள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்டான்லி கிப்பன்ஸ் என்ற வர்த்தகரால் நேற்று ஏலம் விடப்பட்டது. இந்த நான்கு தபால் தலையையும்ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் அஞ்சல் தலை சேகரிப்பாளர் ஒருவர் 5 லட்சம் பவுண்ட் கொடுத்து ஏலம் எடுத்துள்ளார். இந்த தொகை இந்திய மதிப்பில் ரூ.4 கோடியே 14 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தபால்தலை வெளியாகி கிட்டத்தட்ட 70 வருடங்கள் ஆகின்ற நிலையிலும் மகாத்மா காந்திக்கு இன்னும் மதிப்பு குறையவில்லை என்பதையே இந்த ஏலத்தொகை காட்டுகிறது.