2 மணி நேரம் தாமதமாக வேலைக்கு சென்றவருக்கு 10 நாள் ஜெயில்!
பொதுவாக தாமதமாக வேலைக்கு சென்றால் மிஞ்சி மிஞ்சி போனால் மேனேஜர் திட்டுவார், அல்லது லாஸ் ஆஃப் பே’ நடக்கும். ஆனால் இரண்டு மணி நேரம் தாமதமாக வேலைக்கு சென்ற ஊழியர் ஒருவருக்கு 10 நாட்கள் ஜெயில் தண்டனையும், 150 மணி நேரங்கள் சமூக சேவையும் செய்ய வேண்டும் என்ற தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நல்லவேளையாக இந்த சம்பவம் நடந்தது அமெரிக்காவில்….
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்த 21 வயது டீன்ட்ரி சோமர்விலே என்பவர் அங்குள்ள நீதிமன்றம் ல் ஜூரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் ஒருநாள் அயர்ச்சி காரணமாக தூங்கிவிட்டார். எனவே லேட்டாக கண்விழித்து பின்னர் அரக்கபரக்க 9 மணிக்கு செல்ல வேண்டிய கோர்ட்டுக்கு 11 மணிக்கு சென்றுள்ளார்.
நீதிபதி ஏன் லேட் என கேட்டதற்கு தான் தூங்கியதால் பணிக்கு தாமதமாக வந்ததாக தெரிவித்து இருக்கிறார். தனக்கு அபராதம் விதிக்கப்படும் என டீன்ட்ரி நினைத்திருக்க, கோபமடைந்த நீதிபதி 10 நாட்கள் சிறைத்தண்டனையும் 150 மணி நேரம் சமூக சேவையும் செய்ய வேண்டும் என தண்டனை வழங்கி விட்டார்.