ஒரே இடத்தில் இரண்டு ரயில்கள் தடம் புரண்டதால் மத்திய பிரதேசத்தில் பரபரப்பு
மத்திய பிரதேச மாநிலத்தில் ஹர்தா என்ற இடத்தில் மும்பையிலிருந்து வாரணாசி சென்ற காமயானி எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் இன்று அதிகாலை தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் ரயில் பெட்டிகளில் சிக்கியிருந்த சுமார் 300 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மசாக் என்ற ஆற்றில் நடந்த இந்த விபத்து நிகழ்ந்த சில நிமிடங்களில் ஜபல்பூரிலிருந்து மும்பை வந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகளும் அதே இடத்தில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையிலிருந்து வாரணாசிக்கு காமயானி ரயில் நேற்று இரவு வழக்கம் போல் புறப்பட்டுச் சென்ற ரயில் மத்தியபிரதேச மாநிலம் ஹர்தா என்ற பகுதியிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மசாக் ஆற்றின் மீதிருந்த பாலத்தை கடந்த போது அதன் 5 பெட்டிகள் தடம்புரண்டன. இதனால் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறினர். தடம் புரண்ட வேகத்தில் ரயிலின் 5 பெட்டிகள் மசாக் ஆற்றில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஹர்தா மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆற்றில் விழுந்த பயணிகளையும், ரயில் பெட்டிகளில் சிக்கியிருந்த பயணிகளையும் மீட்புப் பணிகளில் இறங்கியுள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
இந்த பதற்றம் அடங்குவதற்குள் காமயானி ரயில் தடம் புரண்ட இடம் அருகே ஜபல்பூரிலிருந்து மும்பை நோக்கி வந்துகொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகளும் தடம் புரண்டன. இரண்டு ரயில்களின் பெட்டிகளும் ஒரே இடத்தில் தடம் புரண்டதையடுத்து மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விபத்து நிகழ்ந்த இடத்திற்கு 5 பெட்டிகள் கொண்ட ரயிலில் மூலம் மீட்புக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அதில் 25 மருத்துவர்கள் கொண்ட சிறப்பு குழு, போலீசார், மற்றும் மீட்புப் படையினர் சென்றுள்ளனர். கடும் இருள் மற்றும், கன மழை, வெள்ளத்தால் மீட்புப் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 300 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் 300 பேருக்கும் மேல் ரயில் பெட்டிகளில் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக மேற்கு மத்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் பியூஷ் மாத்தூர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்தும் விபத்தில் சிக்கியோர் குறித்தும் விபரங்களை தெரிந்து கொள்ள ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மும்பை (022) – 25280005 பிரிங்கி (016) – 48426 போபால் (0755) – 4001609 ஹர்தா (+91) – 9752460088 பினா (07580) – 222580 இடார்சி (07572) – 241920