விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவருக்கு 20 ஆண்டு சிறை: இலங்கை கோர்ட்டு தீர்ப்பு
கடந்த 2008ஆம் ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்பு நகர ரெயில் நிலையத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த பெண் மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதல் ஒன்றில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலை நடத்த விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு உதவி செய்ததாகவும், அவர்களுடன் சேர்ந்து தாக்குதலுக்கு கூட்டு சதியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கனகசபை தேவதாசன் என்கிற நாதன் என்பவர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர், மீது கொழும்பு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதி பியசேனா ரனசிங்கே, “குற்றம் சாட்டப்பட்டவர் மீது அவர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருப்பது அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே நாதனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கிறேன்” என்று தீர்ப்பளித்தார்