2016 எப்படி இருக்க வேண்டும்?

arfda_2680421h

புத்தாண்டான 2016-ல் ரியல் எஸ்டேட் வளர்ச்சி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் துறை நிபுணர்கள், கட்டுநர்கள், வீடு வாங்குபவர்கள் கூறிய கருத்துகள்:

சரியான நேரத்தில் முடிக்க வேண்டும்

2016-ல் திட்டங்களுக்கான ஒப்புதல்கள் பெறுவதில் தாமதம் இருக்கக் கூடாது. திட்டங்களைப் பொறுப்புடனும், தொழில்முறை நேர்த்தியுடனும் முடிக்க வேண்டும். கட்டுநர்கள் திட்டங்களைப் பொருத்தமில்லாத இடங்களில் அறிவிப்பதை நிறுத்த வேண்டும். ஆடம்பரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளின் தேவை இப்போது குறைந்துவிட்டதால், மலிவான, நடுநிலையான குடியிருப்பு பிரிவுகளில் கவனத்தைத் திருப்ப வேண்டும்.

மானியங்கள், ஊக்கத்தொகைகள்

அரசு செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள் – சூரிய ஆற்றலுக்கான மானியங்களை நீட்டிக்க வேண்டும். சூரிய ஆற்றல் திட்டத்துக்குக் குறைந்த வட்டியில், உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும். மலிவான குடியிருப்புகளுக்கும், ‘எஃப்எஸ்ஐ’ எனப்படும் ‘ஃப்ளோர் ஸ்பேஸ் இன்டெக்ஸ்’ திட்டங்களுக்கும் ஊக்கத் தொகைகள் அளிப்பது பயனுள்ளதாக இருக்கும். அதேபோல், ‘ரியல் எஸ்டேட் இன்வெஸ்மெண்ட் டிரஸ்ட்ஸ்(REITs)’ தொடங்கினால் முத்திரைத்தாள், பதிவுக் கட்டணங்கள், சேவை வரி, வாட் வரி, உற்பத்தி வரி போன்றவற்றைச் சீரமைக்க முடியும்.

நிதி பயன்கள்

வங்கிகள் வீட்டுக் கடன்களை எளிமையான கட்டணங்களில் அளிக்கத் தொடங்கியிருந்தாலும், அரசு குறைவான வட்டியில் கடன் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வீடுவாங்குபவர்கள் எதிர்பார்க்கின்றனர். மலிவான குடியிருப்புப் பிரிவுகளில், நிதி பயன்களை அதிகரித்தால், அது வெளி மூலதனம் துறைக்குள் வருவதை அதிகரிக்கும்.

ரியல் எஸ்டேட் மசோதா

ரியல் எஸ்டேட்(கட்டுப்பாடு மற்றும் மேம்பாடு) மசோதா 2015, மாநிலங்களவையில் விரைவில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா துறையில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர முடியும். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த நடவடிக்கை துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. அத்துடன் வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும். சரக்கு மற்றும் சேவைவரி மசோதாவும் 2016-ல் நிறைவேறினால், அதுவும் துறையை ஊக்கப்படுத்தும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

‘எஃப்எஸ்ஐ’ விதிகளை மறுசீரமைத்தல்

நகரங்களின் மேம்பாட்டுக்குத் தேவைப்படும் நிலங்கள் குறைவாக இருக்கின்றன. பெருகிவரும் மக்கள்தொகையைச் சமாளிக்க பரவலான வளர்ச்சி முக்கியம். சென்னையில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் ‘எஃப்எஸ்ஐ’ 3.5 தான். ஆனால், சர்வதேச நகரங்கள் பத்துக்கும் மேற்பட்ட ‘எஃப்எஸ்ஐ’களை அனுமதிக்கின்றன. கட்டுப்படுத்தப்பட்ட நிலப் பயன்பாடு கட்டுமான செலவுகளை அதிகரிக்கிறது. அத்துடன் போதுமான இணைப்பு, உள்கட்டமைப்பு வசதிகளில்லாத புறநகர்களில் திட்டமிடப்படாத வளர்ச்சியை உருவாக்குகிறது. ஆந்திர பிரதேசம் ‘எஃப்எஸ்ஐ’ கருத்தை நீக்கியதால், ரியால்டி பொருட்களை போதுமான அளவுக்கு விநியோகிக்க முடிகிறது.

நகர்ப்புறத் திட்டமிடல் மேம்பாடு

நகரப்புறத் திட்டமிடலை முடுக்கிவிடுவதும், கட்டிட வடிவமைப்பை மேம்படுத்துவதும் புத்தாண்டின் முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும். நவீன சமகால கட்டிடக்கலை, சூழலியல் நிலைத்தன்மையுடன் இயங்குவதாய் இருக்க வேண்டும். கட்டுமானத் தரத்தையும், வேகத்தையும் வழங்கும் புதிய பொருட்களையும், நவீனத் தொழில்நுட்பங்களையும் பின்பற்ற வேண்டும். கட்டிடக் கலைஞர்கள் வட்டார வடிவமைப்புகளை இணைத்து கட்டிடங்களை வடிவமைக்க வேண்டும். அரசு நகரத் திட்டமிடல் நிபுணர்களை ஆலோசித்து நகரங்களை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும்.

எப்படி இருக்க வேண்டும்?

நகரப்புறத் திட்டமிடலை முடுக்கிவிடுவதும், கட்டிட வடிவமைப்பை மேம்படுத்துவதும் புத்தாண்டின் முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும். நவீன சமகால கட்டிடக்கலை, சூழலியல் நிலைத்தன்மையுடன் இயங்குவதாய் இருக்க வேண்டும். கட்டுமானத் தரத்தையும், வேகத்தையும் வழங்கும் புதிய பொருட்களையும், நவீனத் தொழில்நுட்பங்களையும் பின்பற்ற வேண்டும். கட்டிடக் கலைஞர்கள் வட்டார வடிவமைப்புகளை இணைத்து கட்டிடங்களை வடிவமைக்க வேண்டும். அரசு நகரத் திட்டமிடல் நிபுணர்களை ஆலோசித்து நகரங்களை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும்.

ஆற்றல் திறன் மிகுந்த வடிவமைப்புகள்

கட்டிடக்கலை துறை, நிலையான ஆற்றல் திறன் மிகுந்த வடிவமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். பெரிய கண்ணாடி முகப்புகள், அலுமினியம் கலப்பு பேனல்கள், செயற்கைக் கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். உலைச் சாம்பல் தொகுதிகள், பாலிமர் ஃபைபரால் வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட், ஜீரோ எமிஷன் வண்ணங்கள், சூரிய ஆற்றலால் இயங்கும் விளக்குகள், வாட்டர் ஹீட்டர்கள் போன்றவற்றை அமைப்பதை ஊக்கப்படுத்த வேண்டும். தண்ணீரைத் திறனுடன் பயன்படுத்தவதற்கு ஏற்ற மாதிரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை வீடுகளில் கட்டாயம் அமைக்க வேண்டும்.

சிறிய, கச்சிதமான வீடுகள்

வெள்ளம் பாதிக்காத இடங்களில் வீடுவாங்க வேண்டும் என்பதுதான் வீடு வாங்குபவர்களின் தற்போதைய மனநிலை. ஏரிகள், சதுப்புநிலங்களில் சட்டவிரோதமாக வீடு கட்டுதல், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்ற சிக்கல்களை வீடுவாங்குபவர்கள் இப்போது தெரிந்துகொண்டிருக்கிறார்கள். அடிப்படைக் கட்டமைப்பு வசதியில்லாத வீடுகளுக்கு அதிகமான விலையைக் கொடுக்கிறோம் என்பதையும் இப்போது உணர்ந்திருக்கிறார்கள். இதனால், இயல்பாகவே நகரங்களில் மையப்பகுதிகளுக்கு அவர்களுடைய கவனம் திரும்பும். இது நகரின் மையப் பகுதிகளில் 900 சதுர அடிக்குள் சிறிய, கச்சிதமான வீடுகளை உருவாக்கும் தேவையை ஏற்படுத்தியிருக்கிறது. நல்ல சாலைகள், பொது போக்குவரத்து, ஆற்றல் சேமிப்பு போன்ற வசதிகளுடன் அது இருக்க வேண்டும்.

மறைமுக விலை வேண்டாம்

திட்டங்களின் விலைகளை ஏற்றிவிட்டு, இலவசங்கள் வழங்குவதைவிட, நியாயமான விலையில் வீடு வாங்குவதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பிரச்சினைகள் வரும்போது, பெரும்பாலான கட்டுநர்கள் அதை வாடிக்கையாளர்களிடம் தெரியப் படுத்துவதில்லை. சரியான நேரத்தில் திட்டங்களை முடித்துக்கொடுப்பது, என்ன நடக்கிறது என்பதைத் தொடர்ந்து தெரியப்படுத்துவது போன்றவற்றை வீடுவாங்குபவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

உள்கட்டமைப்பு வசதிகள்

ஜனவரி 2016 -ல் முதல் இருபது ஸ்மார்ட் நகரங்கள் அறிவிக்கப் படப்போகின்றன. சென்னை முதல் சுற்றிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டால், நகரின் உள்கட்டமைப்பு வளர்ச்சியடைய பெரிய வாய்ப்பிருக்கிறது. மழைக்கால நீர் மேலாண்மை, சிறந்த இணைப்புகள், சாலைகள், அடிப்படை உள்கட்டமைப்பு போன்றவற்றுக்கு முதல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எல்லா வெப்பநிலைக்கும் ஏற்ற சாலைகள், மழைக்கால நீர் வடிகால்கள், மின்சார கேபிள்கள், இணைய இணைப்புகள் போன்றவற்றைப் புதிதாக மேம்படுத்த வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கையை வலியுறுத்தும் கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

2016-ல் செயல்படப்போகும் மெட்ரோ ரயில் (45 கிலோமீட்டர் தூரம்) திட்டத்தை எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். இது ரியல் எஸ்டேட் வளர்ச்சியை ஒருவிதத்தில் அதிகரிக்கும். அதே மாதிரி, சென்னை-பெங்குளூரு தொழிற்துறை வளர்ச்சியும் ரியல்எஸ்டேட் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Leave a Reply