2017 – அசத்தப்போகும் வடிவமைப்பு போக்குகள்
புத்தாண்டு எப்போதும் புதிய நம்பிக்கைகளுடனும் மாற்றங்களுடனும்தான் பிறக்கிறது. அப்படித்தான் ஒவ்வொரு புத்தாண்டிலும் வண்ணங்களும் வடிவமைப்புகளும் பலவிதமான மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. புத்தாண்டின் புத்துணர்ச்சியை உணர்வதற்கு இந்த மாற்றங்களை வீட்டுக்குள் கொண்டுவரலாம். அந்த வகையில், இந்த ஆண்டு அசத்தவிருக்கும் வடிவமைப்புப் போக்குகளைப் பார்க்கலாம்…
‘ஸ்மார்ட்’ உதவியாளர்கள்
வீடுகளில் ‘வாய்ஸ் அசிஸ்டன்ட்ஸ்’ என்னும் தொழில்நுட்ப உதவியாளர்களைப் பற்றி நீண்ட நாட்களாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். இவர்கள் இந்த ஆண்டு பிரபலமாகவிருக்கிறார்கள். அதேமாதிரி ‘ஸ்மார்ட் ஹோம்’ சாதனங்களும் இந்த ஆண்டு சந்தையில் அதிகமாக விற்பனையாகலாம். அதற்கான முன்னோட்டம்தான் அமேசானின் ‘அலெக்ஸா’ சாதனத்தின் அறிமுகம். இதே மாதிரி, ‘கூகுள் ஹோம்’ சாதனமும் சமீபத்தில் அறிமுகமாகியிருக்கிறது. இந்த இரண்டு சாதனங்களும் வீடுகளை இந்த ஆண்டு ஆளவிருக்கின்றன.
‘ஜுவல் டோன்ஸ்’
அறைக்கலன்கள், அலங்காரப் பொருட்கள் என இந்த ஆண்டு ‘ஜுவல் டோன்ஸ்’ என்றழைக்கப்படும் மரகதப் பச்சை, செவ்வந்தி போன்ற வண்ணங்கள்தான் ஆதிக்கம் செலுத்தவிருக்கின்றன. என்னதான் ‘பேஸ்டல்’ வண்ணங்கள் இந்த ஆண்டின் போக்காக இருந்தாலும் இந்த ‘ஜுவல் டோன்ஸ்’ வண்ணங்களின் ஆதிக்கமும் அதிகமாக இருக்கப்போகின்றன.
படுக்கையின் மாற்றம்
மரச் சட்டகங்களைத் தலைப்பகுதியாகக் கொண்ட படுக்கைகள்தான் கடந்த ஆண்டில் பிரபலமாக இருந்தன. அது இந்த ஆண்டில் மெத்தைத் தலைப்பகுதியாக (upholstered bed head) மாறியிருக்கிறது. இதுவரை ஆடம்பரமான விடுதிகளிலும், பிரபலங்களின் விருந்தினர் மாளிகைகளிலும் மட்டுமே இருந்துவந்த இந்தப் படுக்கைகள் இப்போது பரவலாகவிருக்கின்றன. உடனடியாக வீட்டுக்கு ஆடம்பரத் தோற்றத்தைக் கொடுக்க நினைப்பவர்கள் இந்தப் படுக்கையைத் தேர்ந்தெடுக்கலாம்.
தொங்கும் விளக்குகள்
படுக்கையறையில் மேசை விளக்குகளை வைப்பது பழைய போக்காக மாறிவிட்டது. அதற்குப் பதிலாகத் தொங்கும் விளக்குகளை (pendant lights) படுக்கைக்கு அருகில் வைக்கும் போக்கு இந்த ஆண்டு புதிதாக அறிமுகமாகியிருக்கிறது.
‘கிராஃபிக் டைல்ஸ்’ தரைதளம்
சமையலறைக்கு எந்த மாதிரியான தரைதளத்தைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பவர்கள் இந்த ‘கிராஃபிக் டைல்ஸ்’ தரைதளத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தத் தரைதளம் சமையலறையை விசாலமானதாகவும் பிரகாசமானதாகவும் காட்டும்.
சாட்டின் பித்தளை
பித்தளைப் பூச்சு செய்யப்பட்ட பொருட்கள் சில ஆண்டுகளாகவே பிரபலமாக இருக்கின்றன. இந்த ஆண்டும் இவை மறுபிரவேசம் செய்திருக்கின்றன. அந்த வகையில், சாட்டின் பித்தளைப் பூச்சு செய்யப்பட்ட பொருட்கள் இந்த ஆண்டு வீடுகளை ஆக்கிரமிக்கவிருக்கின்றன.
கறுப்பு ஸ்டீல் மற்றும் கண்ணாடிக் கதவுகள்
கறுப்பு ஸ்டீல் சட்டகத்துடன் கூடிய கண்ணாடிக் கதவுகள் இந்த ஆண்டு பிரபலமாகவிருக்கின்றன. நுழைவாயிலில் வெளிச்சம் வேண்டுமென்று விரும்புபவர்கள் இந்தக் கதவுகளைப் பயன்படுத்தலாம். அத்துடன், குளியலறைக்கும் இந்தக் கதவுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
சமையலறைச் சேகரிப்புச் சுவர்கள்
சமையலறையில் அதிகமான பொருட்களைச் சேகரித்து வைக்கும்படியான ‘கேபினெட்ஸ்’ இந்த ஆண்டு பிரபலமாகப்போகின்றன. அதுவும் இந்த கேபினெட் ஒரு சுவர் முழுவதும் ஆக்கிரமிக்கும்படி வடிவமைக்கிறார்கள். இதனால் சமையலறையில் இடப் பற்றாக்குறை பிரச்சினை வராமல் தடுக்கலாம்.
தொங்கும் நாற்காலிகள்
இந்தத் தொங்கும் நாற்காலிகள் ஏற்கெனவே பிரபலமாக இருந்தாலும் இந்த ஆண்டும் இவற்றின் தாக்கத்தை வீட்டு வடிவமைப்பில் எதிர்பார்க்கலாம். வரவேற்பறை மட்டுமல்லாமல் பிற அறைகளிலும் இந்தத் தொங்கும் நாற்காலிகளைப் பயன்படுத்துவது இந்த ஆண்டு அதிகரிக்கவிருக்கிறது.
முரண்படும் வண்ணங்கள்
சமையலறை கேபினெட்களில் முரண்பாடான வண்ணங்களைப் பயன்படுத்தும் போக்கு இந்த ஆண்டும் தொடரவிருக்கிறது. அதிலும் குறிப்பாக வெள்ளை நிறம் இதில் ஆதிக்கம் செலுத்தும். அதனால், வெள்ளை நிறத்தோடு பொருந்தும் அடர்த்தியான வண்ணங்களின் பயன்பாடும் அதிகரிக்கலாம்.