திருமலையில் நேற்று அதிக அளவு பக்தர்களின் கூட்டம் இருந்ததால், 22 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை பக்தர்கள் தரிசித்தனர்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். ஆனால் வழக்கத்தைவிட மிகவும் அதிகமாக இருந்தது. நேற்றைய தினத்தில் தர்ம தரிசனத்தில், ஏழுமலையான தரிசிக்க பக்தர்கள் 22 மணிநேரம், காத்திருந்தனர்.
அதிகாலை 3 மணிமுதல் மாலை 6 மணிவரை 46,280 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்ததாக தேவஸ்தான செய்திகள் கூறுகின்றன. முன்னதாக, புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பக்தர்களின் கூட்டத்தை கருதி, கோயிலில் உடனடி பதிவின் கீழ் வழங்கப்படும் 7 ஆயிரம் டிக்கெட்டுகள், ரூ.300 விரைவு தரிசனம், நடைபாதை பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசனம் ஆகியவற்றை தேவஸ்தானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்திருந்தது.
சனிக்கிழமை முழுவதும் 76,027 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். அன்றைய தினம் மாலை நிலவரப்படி, தர்ம தரிசன பக்தர்கள் 31 காத்திருப்பு அறைகளை கடந்து 2 கி.மீ. தொலைவில் ஏழுமலையானை தரிசிக்க காத்திருந்தனர்.