அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் சுமார் 2200 பன்றிக்குட்டிகளை ஏற்றிக்கொண்ட சென்ற டிரக் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பன்றிக்குட்டிகளை உயிருடன் மீட்க தீயணைப்படையினர், மீட்புப்படையினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
நேற்று இரவு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சென்று கொண்டிருந்த டிரக் திடீரென நிலைதடுமாறி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்து காரணமாக இந்த டிரக்கில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 2200 பன்றிக்குட்டிகளை மீட்க விரைந்து வந்த மீட்புப்படையினர் கிட்டத்தட்ட அனைத்து பன்றிக்குட்டிகளையும் பலமணி நேர தீவிர முயற்சிக்கு பின்னர் மீட்டதாக கூறப்படுகிறது.
கொட்டும் மழையில் பன்றிக்குட்டிகளை மீட்ட மீட்புத்துறையினர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘நல்லவேளையாக பன்றிக்குட்டிகள் அனைத்தும் பாதுகாப்பாக மாற்று டிரக் ஒன்றில் ஏற்றப்பட்டது. எந்த பன்றிக்குட்டிகளுக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இருப்பினும் ஒருசில பன்றிக்குட்டிகள் காணாமல் போய்விட்டதாக தெரிகிறது’ என்று கூறினார்.