ஸ்ரீரங்கம், மதுரை, பழநி உட்பட, 234 கோவில்களில், சிறப்பு கட்டண தரிசன முறையை, தமிழக அரசு விரைவில் ரத்து செய்ய உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும், 38 ஆயிரம் கோவில்கள், அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ளன. இதில், 4,000 கோவில்கள் அதிக வருவாய் உடையவை. இவற்றில், 234 கோவில்களில், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களிடம் இருந்து, 5 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை, சிறப்பு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
2013ம் ஆண்டு…: சுவாமியை தரிசனம் செய்ய கட்டணம் வசூலிப்பது, பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த, 2013ல், பக்தர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு காரணமாக, 142 கோவில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை அறநிலையத் துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்தனர்.இதற்கான உத்தரவு எழுத்துவடிவில் இல்லாததால், அடுத்த சில மாதங்களிலேயே, கட்டண வசூல் மீண்டும் துவங்கியது. இந்நிலையில், சிறப்பு கட்டண தரிசனத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
அரசு ஏற்பு: இதுகுறித்து, அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்ரீரங்கம், மதுரை, பழநி உள்ளிட்ட, 234 கோவில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்வது குறித்து, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுஉள்ளது. இதை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. விரைவில், இதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும். இது ரத்தானால் கோவில்களில், அனைவருக்கும் ஒரே தரிசன முறை அமலுக்கு வரும். இதனால், கட்டண அடிப்படையில் பக்தர்களை பிரித்து பார்ப்பது முடிவுக்கு வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.