காவிரி நீரை தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் பகிர்ந்து கொள்வது தொடர்பான இறுதித் தீர்ப்பை காவிரி நடுவர் மன்றம் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டது. இந்த தீர்ப்பை அமல்படுத்த ஏதுவாக இதனை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் தீர்ப்பு மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்கி 6 ஆண்டுகள் ஆகியும், அந்த தீர்ப்பை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவும் அமைக்கப்படாததால் அவற்றை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவற்றை மத்திய அரசு அமைக்க காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால், இடைக்கால ஏற்பாடாக காவிரி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்த காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் ஏற்கனவே பலமுறை கூடி விவாதித்துள்ளது.
நேற்று மீண்டும் டெல்லியில் காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. மத்திய நீர்வளத் துறை செயலாளரும், காவிரி கண்காணிப்புக் குழு தலைவருமான அலோக் ராவத் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு கூடிய இந்தக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் அரசு தலைமைச் செயலாளர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார், காவிரி தொழில்நுட்பப் பிரிவு ஆலோசகர் சுப்பிரமணியன் ஆகியோரும் கர்நாடகம் சார்பில் தலைமைச் செயலாளர் கவுஷிக் முகர்ஜி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் இந்தக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புப்படி இந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 டி.எம்.சி. தண்ணீரும், டிசம்பர் மாதம் 8 டி.எம்.சி. தண்ணீரும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3 டி.எம்.சி. தண்ணீரும் என மொத்தம் 26 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று கர்நாடக அரசு காவிரியில் ஜனவரி மாதம் வரை 26 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி கண்காணிப்புக் குழுவின் தலைவர் அலோக் ராவத் உத்தரவிட்டார்.