வாரணாசி பேரணியில் நெரிசல். இடுபாடுகளில் சிக்கி 24 பேர் பலி
வாரணாசியில் உள்ள ஜெய் குருதேவ் என்ற ஆசிரமம் ஏற்பாடு செய்திருந்த பேரணி ஒன்றில் கூட்ட நெரிசல் காரணமாக இதுவரை 24 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் இருந்து சந்தேவ்லி வரை நடத்தப்பட்ட பேரணி ஒன்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வரிசையாக சென்றனர். ராஜ்காட் மேம்பாலத்தின் மீது இந்த பேரணி சென்று கொண்டிருந்தபோது திடீரென நெருக்கடியான ஒரு இடத்தில் அதிகமான மக்கள் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு முந்த முயன்றனர்.
அப்போது, பாலம் உடைந்துவிட்டதாக, வதந்தி பரவியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு, தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வரையும் இழப்பீடு வழங்குவதாக, உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.