25 சென்ட்… ரூ 85 ஆயிரம்…! செழிப்பான வருமானம் கொடுக்கும் செடிமுருங்கை

25 சென்ட்… ரூ 85 ஆயிரம்…! செழிப்பான வருமானம் கொடுக்கும் செடிமுருங்கை

2*எல்லா வகையான மண்ணிலும் செடிமுருங்கை சாகுபடி செய்யலாம்.

*ஆடி, கார்த்திகை, தை ஆகிய பட்டங்களில் விதைப்பு செய்யலாம்.

*பி.கே.எம்-1, 2 ஆகிய ரகங்கள் சிறப்பானவை.

*விதைப்பு செய்வதற்கான செடிமுருங்கை விதை, ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது.

“ரசாயன விவசாயம் மண்ணுக்கும் மனிதஉடலுக்கும் தீங்கானதுனு எங்களுக்கும் நல்லாவே தெரியுது. இயற்கை விவசாயம் செய்யணும்னு எங்களுக்கும் ஆசையாதான் இருக்கு. ஆனா, அதுக்கு மாடு வளர்த்தாகணும். ரொம்ப சிரமம். எனக்குள்ள சூழல் அதுக்கெல்லாம் ஒத்துவராது’’ இது போன்ற ஆதங்கக் குரல்கள் தற்போது அதிகமாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறன. இவர்களுக்கு நடுவே ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, மாடுகள் இல்லாவிட்டாலும், இயற்கை விவசாயம் வெற்றிகரமாக செய்யமுடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் திருச்சியைச் சேர்ந்த பொறியாளர் கோபாலன். இவர் வேளாண் பொறியியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள அயோத்திப்பட்டியில் இருக்கும் தனது பூர்வீக நிலத்தில் இவர் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

பச்சைப்பசேலென செழிப்பாக காட்சி அளிக்கிறது கோபாலனின் ஸ்ரீரங்கா இயற்கை விவசாயப் பண்ணை. செடிமுருங்கை, பப்பாளி, தென்னை, மாதுளை, எலுமிச்சை, தேக்கு, மகோகனி, ரோஸ்வுட் என விதவிதமான பயிர்கள்… கடும் கோடையிலும் பசுமை படர்ந்திருக்கிறது.

‘‘இந்தப் பண்ணையோட மொத்தப் பரப்பு ஒரு ஏக்கர்தான். இது எங்களோட பூர்வீக நிலம். 25 வருஷமா விவசாயம் செய்யாம சும்மாவேதான் கிடந்துச்சு. நான், வேளாண் பொறியியல் துறையில நீர்மேலாண்மைப் பிரிவில் வேலை பார்த்தப்ப, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கலந்துகிட்ட சில கருத்தரங்குகள்ல நீர் மேலாண்மை பத்தி பேசியிருக்கேன். அவரோட ஏற்பட்ட அறிமுகம், இயற்கை விவசாயத்து மேல ஒரு ஈடுபாட்டைக் கொடுத்துச்சு. ஆனாலும், வேலையில இருந்ததுனால விவசாயம் செய்ய நேரம் கிடைக்கலை. பணி ஒய்வுக்குப் பிறகும் சில வருஷமா சும்மாதான் இருந்தேன். இப்ப எனக்கு 72 வயசு. ‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்சதும் ஆர்வம் அதிகமாகி, ரெண்டரை வருஷமாத்தான் இந்த நிலத்துல விவசாயம் செஞ்சிகிட்டு இருக்கேன். இதுக்காக, தினமும் திருச்சியில இருந்து வந்து போயிகிட்டு இருக்கேன். தலா 25 சென்ட்ல செடிமுருங்கை, பப்பாளி, 50 சென்ட்ல மாதுளை, மா, பலா, எலுமிச்சை, வேலியோரத்துல தென்னை, தேக்கு, மகோகனி, ரோஸ்வுட் சாகுபடி செஞ்சிருக்கேன். செடிமுருங்கை, பப்பாளி ரெண்டும் நடவுபண்ணி 20 மாசமாகுது. இதுல இருந்து வருமானம் வந்துகிட்டு இருக்கு. மத்த மரங்கள் இனிமேதான் பலன் கொடுக்கும். ஓட்டுமொத்த நிலத்துக்கும் சொட்டுநீர் அமைச்சி பாசனம் செஞ்சிகிட்டு இருக்கேன். இங்க நிரந்தரமா தங்கி இருக்க ஆள் கிடைக்காததால மாடுகளை வளர்க்க முடியலை. அதனால, வெளியில இருந்து ஆட்டு எரு, மண்புழு உரம், மாதிரியான உயிர் உரங்களை விலைக்கு வாங்கிக்கிட்டு வந்து இயற்கை விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்கேன். செடிமுருங்கையில நான் எதிர்பார்த்ததைவிட நிறைவான லாபம் கிடைச்சிக்கிட்டு இருக்கு. மற்ற பயிர்களும் வெற்றிகரமாக விளைஞ்சிக்கிட்டு இருக்கு’’ என்று சொன்னவர் வரவு, செலவு கணக்கு பற்றி பேசத் தொடங்கினார்.

ஒரு முறை விதைப்பு… மூன்று போகம் மகசூல்!

‘‘இது செம்மண் பூமி. செடிமுருங்கை சிறப்பா விளையுது. இதுல, பெரிய பிரச்னையா இருக்கக்கூடியது, புரூட்டோனியா புழு, கம்பளிப் பூச்சித்தாக்குதல்தான். ஆனா, என்னோட செடிகள்ல அதுங்களோட தாக்குதல் கொஞ்சம் கூட இல்லை. பொதுவாகவே செடிமுருங்கைக்கு தண்ணி அதிகம் தேவைப்படாது. இயற்கை உரங்கள் கொடுக்கிறதுனால மண்ல ஈரத்தன்மை இருந்துகிட்டே இருக்கு. வாரம் ஒரு முறை சொட்டுநீர்ப்பாசனம் மூலமா அரைமணி நேரம்தான் தண்ணி கொடுக்கிறோம். இயற்கை இடுபொருட்கள் மட்டுமே கொடுக்கிறதுனால, செடிகள் செழிப்பாகவே இருக்கு. காய்கள் நல்லா சதைப்பற்றோடு சுவையா இருக்கு. விதைப்பிலிருந்து 6-வது மாசத்துல செடிக காய்ப்புக்கு வந்து அடுத்த 6 மாசத்துக்கு மகசூல் கொடுக்குது. மொத்தம் 240 செடிக இருக்கு. செடிக்கு 10 கிலோ கணக்குல 2,400 கிலோ காய்கள் கிடைச்சுது. அதுல ஆயிரத்து 400 கிலோவை, காயா வித்தேன். ஒரு கிலோ சராசரியா 25 ரூபாய் வீதம் 35 ஆயிரம் ரூபாய் விலை கிடைச்சுது. ஆயிரம் கிலோ காயை, செடியிலயே நல்லா முத்தவிட்டு, அதுல இருந்து நல்ல தரமான முளைப்புத் திறன்மிக்க, செதில்களோடு இருக்கிற விதைகளை எடுத்தேன்.

50 கிலோ கிடைச்சது. விதைப்பு செய்ற முருங்கை விதை, ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை போகுது. அது மூலமா, 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுது. 25 சென்ட் செடிமுருங்கை சாகுபடியில முதல் போகத்துல மட்டும் மொத்தம் 85 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைச்சுது. இதுல செலவு போக, 65 ஆயிரம் ரூபாய் நிகர லாபமாக கையில நின்னது.

முதல் போக காய்ப்பு முடிஞ்சதும் செடிகளைக் கவாத்து செஞ்சு, இயற்கை உரங்களைக் கொடுத்தோம். அடுத்த 6 மாசத்துல செடிகள் நல்லா வளர்ந்து இப்ப இரண்டாம் போகம் காய்ப்பு தொடங்கியிருக்கு’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

Leave a Reply