25 ஆண்டுகால சச்சின் சாதனை

25 ஆண்டுகால கிரிக்கெட் பயணம்
ஒய்வு பெறுகிறார் சச்சின்

சச்சின் டெண்டுல்கர் கடைசியில் இருதய கனத்துடன் ஓய்வு அறிவித்து விட்டார். மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடவுள்ள 2வது டெஸ்ட் போட்டி அவரது கடைசி டெஸ்ட் போட்டி. இந்த நிலையில் அவரது கிரிக்கெட் வாழ்வை துவக்கம் முதல் புள்ளி விவரங்களுடனுடனும், தனிப்பட்ட நினைவுகளுடனும் அசைபோடுதல் சுவாரசியமாக இருக்கும்.

சச்சின் டெண்டுல்கருக்கு வயது 14. தனது பள்ளித் தோழன் வினோத் காம்ப்ளி(16) உடன் சேர்ந்து 664 ரன்களைக் குவித்து லைம் லைட்டிற்கு வந்தார். எங்கும் சச்சின், சச்சின் என்ற நமாவளி உர்வான சமயம்! சச்சின் இதில் 326 ரன்கள் எடுத்து வீழ்த்த முடியாமல் நாட் அவுட்டாக இருந்தார்.

டிசம்பர் 11, 1988 – முதல் போட்டியிலேயே முதல் தர கிரிக்கெட்டில் சதம்:

15 வயதான சச்சின் அப்போது வான்கடே ஸ்டேடியத்தில் ஜோதிகளை ஏற்றினார். குஜ்ராத்திற்கு எதிராக ஆட்டமிழக்காமல் சதம் எடுத்தார் சச்சின். முதல் தர கிரிக்கெட் முதல் போட்டியிலேயே சதம் எடுத்த இளம் வீரர் என்ற சாதனையுடந்தான் தன் வாழ்வைத் துவங்கியுள்ளார். வலையில் கபில்தேவை இவர் ஆடிய விதத்தைப் பார்த்த திலிப் வெங்சர்க்கார் இவரை மும்பை அணிக்கு தேர்வு செய்திருந்தார்.

1989 சச்சினின் டெஸ்ட் டெபுயு!

பச்சிளம் பாலகன் ஆன சச்சின் வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம், இம்ரான் கான், ஆகியோரை சந்திக்கவேண்டும். வக்கார் யூனிஸ் பந்தில் மூக்கில் அடி வாங்கினார். மருத்துவ உதவி அப்போது அவருக்கு கிடைக்கவில்லை. காரணம் பாகிஸ்தான் மறுத்தது. அவர் 57 ரன்கள் எடுத்து தனது 16 வயது தைரியத்தை வெளிப்படுத்தினார்.

நியூசிலாந்து தொடர்:

இந்தத் தொடரில் அவர் முதன் முதலில் சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 88 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு அருமையான டெஸ்ட் இன்னிங்ஸ் அது. கடினமான ஸ்விங்கிங் சூழ்நிலைகளில் அவர் அவுட் ஸ்விங்கர் பந்துகளை மிட் விக்கெட் திசையில் புல் ஆடிய விதம் அனைவரையும் ஒரு ஜீனியஸ் உருவாகிவிட்டார் என்று எண்ண வைத்தது.

சச்சின் முதல் டெஸ்ட் சதம்; ஆகஸ்ட் 14, 1990!

17 ஆண்டுகள் 112 நாட்கள்! சச்சின் வயது! ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் பலரும் இந்திய அணி தோற்றுத்தான் போகும் என்று நினைத்திருந்தவேளையில் களமிறங்கி 119 ரன்களை எடுத்து டெஸ்ட் போட்டியை அரிதான டிராவுக்கு இட்டுச் சென்றார். இளம் வயதில் டெஸ்ட் சதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் சச்சின்.

1992ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியா தொடர்!

மெக்டர்மாட், முரட்டு மீசை மெர்வ் ஹியூஸ் என்று ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து மிரட்டல். இதில் மெல்பர்னில் ஒரு அசத்தல் 40 ரன்களை எடுத்த சச்சின். அதன் பிறகு இன்னொரு லெஜண்ட் ஷேன் வார்ன் டெபு மேட்சான சிட்னியில் சதம் எடுத்தார். இந்த சதம்தான் சச்சினின் பட்டியலில் அன்று 2வது சிறந்த சதமாக இருந்தது.

ஆனால் பிப்ரவரி 2- 3 ஆம் தேதி உலகின் அதிவேக ஆட்டக்களமான பெர்த்த்தில் 114 ரன்களை எடுத்த போது ஆஸ்ட்ரேலிய அணியே இவரது சாதனைகளை அப்போதே பேசத்தொடங்கிவிட்டது. ஆலன் பார்டர், இந்தப் பையன் இன்னும் என்னன்ன செய்வாரோ என்று அச்சமாக இருக்கிறது என்றார். அதே தொடரில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் மார்க் டெய்லர், ஆலன் பார்டர் ஆகியோரை அடுத்தடுத்து தனது லெக்ஸ்பின் பந்து வீச்சில் வீழ்த்திய போது ஆஸ்ட்ரேலிய வர்ணனையாளர் பில் லாரி என்ன கூறினார் தெரியுமா? “ஓ காட் ஹேச் சென்ட் திச் பாய் ஃபிரம் ஹெவன்’ என்றார். அதாவது கடவுள் இந்தப் பையனை சொர்க்கத்திலிருந்து அனுப்பியுள்ளார்’ என்றார்.

ரொம்ப நாளைக்கு இன்றும் கூட சச்சின் தான் அடித்த சதங்களில் ஆகச்சிறந்த சதம் இதுதான் என்று கூறுவார்.

ஏப்ரல் 1992:

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான யார்க் ஷயருக்கு இவர் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். அங்கு பாகிஸ்தனியர்கள் அதிகம். சச்சினைக் காண அன்று வந்த பாகிஸ்தானிய முஸ்லிம் பெண்கள், ஆண்கள், சிறுவர்கள், சிறுமிகள் ஏராளம்.

நவம்பர் 27- 28 தென் ஆப்பிரிக்கா சதம்:

முதல் டெஸ்ட் போட்டியில் ஜாண்டி ரோட்ஸின் மின்ன்லவேக த்ரோவிற்கு பேட்டிங் முனையில் திடுக் ரன் அவுட் ஆனார் சச்சின். அதுவே முதன் முறையாக தேர்ட் அம்பயர் கொடுத்த தீர்ப்பாகும். மிகவும் கடுமையான பந்து வீச்சு அப்பொது தென் ஆப்பிரிக்காவில். ஆலன் டோனல்ட், மெரிக் பிரிங்கிள், மேத்யூஸ், கிரெய்க் மெக்மில்லன் என்று கடினமனான பந்து வீச்சு, 2வது டெஸ்ட் போட்டி ஜொஹான்னஸ்பர்கில் நடக்கிறது. இந்திய அணி 227 க்கு சுருண்டது சச்சின் அதில் அபாரமான 111 ரன்களை விளாசினார். ஜாண்டி ரோட்ஸ் என்ற மலை நிற்கும் பாயிண்ட் திசையில் அடித்த ஸ்கொயர் கட்கள் ‘நான் அடித்த ஷாட்டை பிடித்து என்னையா ரன் அவுட் செய்தாய்’ என்பது போல் பழிக்குப் பழி வாங்குவதாக அவர் ஸ்கொயர் கட்களை ரோட்ஸிற்கு வலது பக்கமும் இடது பக்கமும் விளாசினார். ரோட்ஸ் இவரது ஷாட்களை பிடிக்க பிரம்மப் பிரயத்தனம் மேற்கொண்டார். ஆனால் கேப்டன் கெப்ளர் வெசல்ஸ் ரோட்ஸ் எங்காவது காயம் பட்டுக் கொள்ளப்போகிறார் என்று அவரை பாயிண்டிலிருந்து தூக்கி ஸ்கொயர் லெக் திசையில் மாற்றியது இன்று வரை பசுமையாக நினைவில் உள்ளது.

இந்த 111 ரன்களுடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 19 வயதிலேயே 1000 ரன்களை எடுத்த வீரர் மற்றொரு சாதனையை நிகழ்த்தினார்.

முதன் முதலாக இந்தியாவில் தோற்றம்!

கிரிக்கெட் டெபுயுவிற்கு பிறகு ஒரு உலகக் கோப்பை (1992)யிலும் பங்கேற்ற பிறகே இந்தியாவில் சச்சின் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடினார். 1993 பிப்ரவரி மாதம் சச்சின் இங்கிலாந்தை வறுத்து எடுத்தார். 165 ரன்களில் 24 பவுண்டரி ஒரு சிக்சர். இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 22 ரன்களில் வெற்றி பெற்றது. இது சென்னையில் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சிலும் சாதனை!

1992 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலிய தொடரின் போது முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா, ஆஸ்ட்ரேலியா, வெஸ்ட் இண்டீஸ் பங்கேற்றன. இதில் முதல் போட்டியே படுபயங்கரமான பெர்த் பிட்சில். இந்தியா 126 ரன்களுக்கு ஆலவுட். வெஸ்ட் இண்டீஸ் அணியும் இந்தியாவின் கபில்தேவ், பானர்ஜி, ஸ்ரீனாத், பிரபாகர் ஆகியோரது பந்து வீச்சில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் 40 ஒவர்களை சிறந்த வீச்சாளர்கள் வீசிவிட்டனர். மேற்கிந்திய தீவுகளுக்குத் தேவை 1 ரன் இருப்பதோ 10 ஓவர்கள், இந்தியாவுக்கு தேவையோ 1 விக்கெட். அப்போது அந்த இளம் சச்சினைத்தான் கேப்டன் அசார் நம்பினார். பந்தை அவர் கையில் கொடுத்தார் எட்ஜ் எடுத்தது. அசாரே கேட்ச் பிடித்தார் ஆட்டம் டை. எதிர்முனையில் ஆம்புரோஸ் ஓங்கி தரையில் பேட்டால் அடித்து தனது கோபத்தைக் காட்டினார்.
திமிலிணி

மீண்டும் நவம்பர் 24,1993ஆம் ஆண்டு ஹீரோ கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில்:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் பரப்பான ஓவரில் பந்து வீசி சச்சின் 3 ரன்களே கொடுக்க இந்தியா வெற்றி பெற்றது. அதன் பிறகு அதே ஹீரோ கோப்பை இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் மேதை பிரையன் லாராவை போல்ட் செய்தார். பிறகு கும்ளே புகுந்தார் இந்தியா கோப்பையை வென்றது.

சச்சின் முதன் முதலில் துவக்க வீரரான நியூசீ. போட்டி: மார்ச் 27, 1994! பூம் பூம் சச்சின்!

நியூசீலாந்து அணிக்கு எதிரான இந்த ஒருநாள் போட்டியில் சித்து விளையாட முடியவில்லை. ஏதோ பிரச்சனை! தானே துவக்க வீரராக செல்கிறேன் என்று கேட்டு வாங்கிக் கொண்டு களமிறங்கினார் சச்சின், இலக்கு 143 ரன்கள்தான்! ஆனால் பிட்ச் தறுமாறு. பந்துகள் ஸ்விங், பவுன்ஸ் என்று தாறுமாறாக இருந்தது. ஆனால் சச்சின் பூம் பூம் சச்சினாக ஆடினார். 49 பந்துகளில் 82 ரன்களை விளாச 143 ரன்கள் 17 ஓவர்களுக்கு இலக்கே போதவில்லை.

அக்டோபர், 1995:

வேர்ல்ட் டெல் ரூ.31.5 கோடிக்கு வணிக ஒப்பந்தம் செய்ய உலகின் பணக்கார கிரிக்கெட் வீரரானார் சச்சின்.

1996 உலகக் கோப்பை:

2 சதங்கள் 3 அரைசதங்கல் 523 ரன்கள் சராசரி 87.16. ஒரு போட்டியில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக கிளென் மெக்ராவை 4 பவுண்டரி ஒரு சிக்சரை விளாச அம்பயரிடமிருந்து கடுப்பில் தொப்பியைப் பிடுங்கி சென்றார் கிளென் மெக்ரா.

மோசமான காலம் – கேப்டன்சி!

ஆகஸ்ட், 8, 1996ஆம் ஆண்டில் 23 வயதில் சச்சின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஜனவரி 2 1998-உடன் கேப்டன்சி காலம் முடிவடைந்தது. தொடர்ச்சியாக 5 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி. மொத்தம் 17 டெஸ்ட் போட்டிகளில் 3-இல் மட்டுமே வெற்றி. பல மனஸ்தாபங்கள், மேட்ச் பிக்சிங் அப்போதுதான் தலை தூக்கியது. மேற்கிந்திய தீவுகள் தொடரில் சச்சின் அபாரமாக ஆடிக் கொடுத்தும் சூதாட்டத் தடை புகழ் அசார், ஜடேஜா ஆகியோர் போட்டிகளைத் தோற்றது ஆகிய ஏமாற்றம், மன வருத்தம், அழுத்தம் ஆகியவற்றுடன் சச்சின் கேப்டன்சியை துறக்கிறார்.

கோல்டன் 1998:

ஆஸ்ட்ரேலிய அணி இங்கு 3 டெஸ்ட் போட்டிகள் 5 ஒருநாள் போட்டிகள் தொடருக்காக இந்தியா வருகிறது. மும்பையில் கடும் பயிற்சியில் இருந்த சச்சின், ஷேன் வார்னுக்கு வேட்டு வைத்திருப்பது அப்போது ஆஸ்ட்ரேலியர்கள் அறியவில்லை. மும்பைக்கும் ஆஸ்ட்ரேலியாவுக்கும் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்திலேயே கடுமையாக தாக்கு தாக்கி 202 ரன்களை ஒரே நாளில் விளாசினார் சச்சின் ஷேன் வார்னுக்கு பலத்த அடி! மும்பை ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தியது.

அதன் பிறகு சென்னை டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் வார்னை ஒரு புரட்டு புரட்ட மேலேறிவந்து ஆடி எட்ஜ் செய்தார் சச்சின் அது கல்லியில் டெய்லரிடம் கேட்ச் ஆனது. ஆஸ்ட்ரேலியா

முதல் இன்னிங்ஸில் 71 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளைக்கு சற்று முன் களமிறங்கிய சச்சின் ஆக்ரோஷமாக 26 ரன்கள் எடுத்து உணவு உட்கொள்ள பெவிலியன் சென்றார். திரும்பி வந்ததுதான் தாமதம் உரியடி உத்சவம் தொடங்கியது, ஷேன் வார்ன், ஸ்டீவ் வாஹ், மெக்ரா அனைவருக்கும் அடி. 155 ரன்களை தேநீர் இடைவேளை முடிந்து உடனே எடுத்தார். இந்தியா ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தியது.

இந்தத் தொடரில் முதல் இரட்டை சதம் அடித்து இரண்டு சதங்கள் 3 அரைசதங்கள் என்று சச்சின் அசத்தினார் இந்தியா தொடரை 2- 1 என்று வென்றது.

ஷார்ஜா, 1998, ஏப்ரல்:

இரண்டு அபாரமான அடுத்தடுத்த சதங்களை விளாசி இந்தியாவில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆஸ்ட்ரேலியாவை தனி மனிதனாக வீழ்த்தி பழி தீர்த்தார் சச்சின்.

ஜனவரி 30 2001 பாகிஸ்தானுக்கு எதிராக தனி மனித போராட்டம்:

சென்னை டெஸ்ட் அது. 271 ரன்கள் வெற்றி இலக்கு. இத்தனைக்கும் சச்சினுக்கு முதுகுவலி. சில ஷாட்களை தியாகம் செய்து 136 ரன்களை எடுத்தார். 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டமிழக்க இந்தியா 13 ரன்களில் தோல்வி. சச்சினுக்கு மிகவும் கடுப்பேற்றிய தோல்வி இதுவென்றால் மிகையாகாது.
மார்ச் 20,2001 ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக கங்கூலி தலைமை இந்தியா 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. சென்னையில் சச்சின் மீண்டும் ஒரு சதம் எடுக்க ஆஸ்ட்ரேலியா தொடர் வெற்றி முடிவுக்கு வந்து தொடரை 2- 1 என்று தோற்று வெளியேறியது.

மார்ச் 31, 2001:

இந்தோரில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக அதிரடி 139 ரன்களை விளாசி ஒரு நாள் போட்டிகளில் முதன் முதலில் 10,000 ரன்களை எடுத்து சாதனை நாயகனானார்.
13 ஆண்டுகள் கழித்து முதன் முதலாக ஸ்டம்பு அவுட் ஆன சச்சின்:
இது பொன்ற ஒரு அரிதான சாதனையை எந்த வீரரும் வைத்திருக்க முடியாது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரர் 13 ஆண்டுகள் கழித்து ஸ்பின்னரிடம் ஸ்டம்பு அவுட் ஆகிறார்.

இங்கிலாந்தின் அஷ்லி ஜைல்ஸ், கேப்டன் நாசர் ஹுசைனின் அசிங்கமான லெக் ஸ்டம்பிற்கு வெளியே பந்து வீசும் உத்தியைக் கடைபிடிக்க வெறுப்பான சச்சின் ஸ்டம்பு அவுட் ஆனார் முதன் முறையாக, ஆனால் சச்சின் நன்றாக ஏசினார் இங்கிலாந்தை. இந்த உத்தி சிறுபிள்ளைத் தனமானது ஹைஸ்கூல் கிரிக்கெட் என்றார்.

ஆகஸ்ட் 22- 23; டான் பிராட்மேன் சாதனை சமன்!

ஹெடிங்லே மைதானத்தில் சச்சின் 193 ரன்களை வெளுத்துக் கட்டினார். அதுவும் போதிய வெளிச்சம் இல்லாமல். கங்கூலி தொடர்ந்து ஆடுவோம் என்றார் சச்சின் அதன் பிறகு ஆண்டூ கேடிக் மற்றும் சில பந்து வீச்சளர்களை மைதானத்தின்று வெளியே அனுப்பினார். கங்கூலியும் சதம். இந்தியா இங்கிலாந்தை இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரையும் சமன் செய்தது. இந்த சதம்தான் டான் பிராட்மேனின் 29வது சதத்தை சமன் செய்த சதம் ஆகும்.

2003 உலகக் கோப்பை கிரிக்கெட், தென் ஆப்பிரிக்கா!

முதல் போட்டியில் இந்தியா ஆஸ்ட்ரேலியாவிடம் படு தோல்வியடைய சச்சின் உட்பட அனைத்து வீரர்கள் வீட்டிலும் கல் எறியப்பட்டது. பெரும் குழப்பம், ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியே இல்லை!! காரணம் சச்சின்! 673 ரன்களைக் குவித்தா சராசரி 61 ரன்களுக்கும் மேல். பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த 98 ரன்கள் சச்சினின் சிறந்த அயல்நாட்டு ஒருநாள் சதங்களில் சிறந்தது.

ஆஸ்ட்ரேலியா சாம்பியன் ஆனால் சச்சின் தொடர் நாயகன்!!
ஜனவரி 2004:

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக சிட்னியில் 241 ரன்களை எடுத்தார். லஷ்மணுடன் ஒருநாள் முழுதும் விக்கெட்டை விடாமல் ஆடி ஸ்டீவ் வாஹின் ஓய்வு கொண்டாட்டத்தை வெறுப்பேற்றினார். இந்த இன்னிங்ஸின் சிறப்பு என்னவெனில் கவர் டிரைவ் ஆடாமலேயே 241 ரன்கள் எடுத்தார்.

மார்ச் 2004:

பாகிஸ்தானுக்கு எதிராக முல்டானில் சேவாக் முச்சதம் காண சச்சின் 194 ரன்கள் எடுத்தார். டிக்ளேர் செய்ததால் அதிர்ச்சியடைந்து, ஏமாற்றமடைந்தார்.

மார்ச் 16, 2005:

கொல்கட்டாவில் பாகிஸ்தானுக்கு எதிராக 52 ரன்களை எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 10,000 ரன்களை எடுத்து சாதனை புரிந்தார். இந்தியா இந்த டெஸ்டில் வென்றது.

அக்டோபர் 25, 2005:

டென்னிஸ் எல்போவால் அவதிப் பட்டுவந்த சச்சின் கிரிக்கெட் வாழ்வு அவ்வளவுதான் என்று அனைவரும் நினைத்தனர், எழுதினர். ஆனால் நாக்பூரில் இலங்கைக்கு எதிராக 96 பந்துகளில் 93 ரன்களை விளாசினார். அப்போதுதான் புல் ஷாட்டை கைவிட்டு சமிந்தா வாஸ் பந்துகளை பெடல் ஸ்வீப் செய்யத் தொடங்கினார்.

கவாஸ்கரைக் கடந்தார்!

இந்திய சாதனையாளர் கவாஸ்கர் எடுத்த 34 சதங்கள் சாதனையை சச்சின் முறியடித்தார். 2005ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 109 ரன்களை நாக்பூர் டெஸ்டில் எடுக்க 35வது சதமானது அது.

மார்ச் 2006:

இங்கிலாந்துக்கு வலது தோள்பட்டை அறுவைசிகிச்சைக்கு செல்கிறார்.இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இல்லை, மேற்கிந்திய தொடரிலும் இல்லை.

செப்டம்பர் 14, 2006: மீண்டும் சச்சின்!

கோலாலம்பூரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டி.எல்.எஃப். கோப்பையில் 148 பந்துகளில் 141 ரன்களை விளாசினார்.

மார்ச் 2, 2008:

முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில், ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக சிடினியில் 126 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆஸ்ட்ரேலியாவில் ஒருநாள்போட்டிகளில் சச்சினின் முதல் சதமாகும் இது. இதனையடுத்து பிரிஸ்பன் மைதானத்தில் 91 ரன்கள் எடுக்கிறார். இந்தியா முத்தரப்பு ஒருநாள் தொடரில் முதன் முறையாக கோப்பையை வென்றது. தோனி தலைமை!

லாரா சாதனை முறியடிப்பு:

அக்டோபர் 17, 2008, மொகாலியில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் ரன்களுக்கான லாரா சாதனையை முறியடித்தார் சச்சின்.

நவம்பர் 5, 2009:

ஐதராபாதில் ஆஸ்ட்ரேலியாவின் 351 ரன்களைத் துரத்தும்போது சச்சின் டெண்டுல்கர் 141 பந்துகளில் 175 ரன்களை எடுத்து ஒருநாள் போட்டிகளில் 17,000 ரன்களைக் கடந்து சாதனை புரிந்தார்.

பிப்ரவரி 24, 2010:

ஒருநாள் கிரிக்கெட்டில் 200!க்கு வாலியரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 147 பந்துகளில் சச்சின் இரட்டை சதம் எடுத்து முதன் முதலில் ஒருநாள் போட்டியில் இரட்டை சாதனை கண்ட நாயகனானார். இந்தியா 401 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா 153 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது.

அக்டோபர் 2010:

முதல் ஐசிசி விருதைப் பெற்று சர் கேரி சோபர்ஸ் டிராபியை பிடிக்கிறார். 2010ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை தட்டிச் சென்றார் சச்சின். இதற்கு ஒருவாரம் சென்று ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு முதலிடம் பிடித்தார் சச்சின்.

டிசம்பர் 19, 2010:

டெஸ்ட் போட்டியைக் காப்பாற்ற கடினமான தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சிற்கு எதிராக கடினமான பிட்சில் சதம் கண்டார் சச்சின். இது அவரது 50வது டெஸ்ட் சதமாகும்.
பிப்ரவரி 19, 2011: உலகக் கோப்பை கிரிக்கெட்!

சச்சினின் உச்சகட்ட மகிழ்ச்சி காலம்:

5 முறை உலகக் கோப்பையை தொட்டுப் பார்க்க முடியாத சச்சின் கடைசியாக உலகக் கோப்பையை தூக்கினார். இங்கிலாந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரகா சதம், பாகிஸ்தானுக்கு எதிராக 85. இந்தத் தொடரில் 432 ரன்களை 53 ரன்கள் சராசரியில் பெற்று சச்சின் ஒரு முடிவுடன் ஆடினார். உலகக் கோப்பையில் 2000 ரன்களையும் 6 சதங்களையும் எடுத்த சாதனையையும் சச்சின் நிகழ்த்தினார்.

மார்ச் 16, 2012: சாதனை சதம் ஆனால்…

வங்கதேசத்திற்கு எதிராக சதம் எடுத்து 100வது சதம் எடுத்தார் சச்சின். ஆனால் இந்தியா தோல்வி தழுவியது.

டிசம்பர் 23, 2012:

ஓருநாள் போட்டிகளிலிருந்து சச்சின் ஓய்வு அறிவித்தார். 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களை விளாசினார்.

அக்டோபர் 2013:

மொத்தம் வாழ்நாளில் இதுவரை 50,000 ரன்களை சச்சின் எடுத்து சாதனை புரிந்தார். அரைலட்சம் ரன்கள்!!

அக்டோபர் 10, 2013:

2 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ள நிலையில் சச்சின் ஓய்வு பெறுவதாக் அறிவித்தார். 200வது டெஸ்ட் தனது கடைசி போட்டி என்று அறிவித்தார்.

சாதனைகளை யாரும் அவ்வளவு சுலபத்தில் முறியடிக்க முடியாது. சில தனிப்பட்ட இன்னிங்ஸ்கள் விடுபட்டிருக்கலாம். அவையெல்லாம் சச்சின் ஓய்வு பெற்ற பிறகு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

Leave a Reply