2,618 வேட்புமனுக்கள் நிராகரிப்பு. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் 2,618 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் இறுதி வேட்பாளர் பட்டியலை நாளை அதாவது மே 2ஆம் தேதி மாலை 3 மணியளவில் வெளியாகவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன் தினம் மாலையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 7 ஆயிரத்து 149 மனுக்களில், 4 ஆயிரத்து 531 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் பல்வேறு காரணங்களால் 2 ஆயிரத்து 618 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு மனுக்களில் கையெழுத்து இல்லாதது, பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யாமல் இருப்பது, முன்மொழிபவர்கள் இல்லாத நிலை, உறுதிமொழி எடுக்காமல் இருப்பது, வைப்புத் தொகை செலுத்தாமல் மனுதாக்கல் செய்திருப்பது போன்றவைகளே காரணங்களாகும் என தேர்தல் துறையினர் தெரிவித்தனர்.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற மே 2ஆம் தேதி கடைசி தினம் என்பதால் அந்த காலக்கெடு முடிந்த பின்னர் மாலை 3 மணிக்கு தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகும். இந்தப் பட்டியல் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படும்.
இறுதிப் பட்டியல் தயாரானவுடன், வேட்பாளரின் பெயர், அவர் சார்ந்துள்ள கட்சி ஆகியவற்றின் விவரங்கள் வாக்காளர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் மு. கருணாநிதி, கொளத்தூர் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், உளுந்தூர்பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், காட்டுமன்னார்கோவிலில் தொல்.திருமாவளவன், பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ், விருகம்பாக்கம் தொகுதியில் பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.