28-ந்தேதி இரவு என்ன நடந்தது? மோடிக்கு கோரிக்கை வைத்த காங்கிரஸ்
உரி ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்கியதால் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ததை அடுத்து இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகள் முகாம்களை அழித்தது. சர்ஜிகல் ஆபரேஷன் என்று அழைக்கப்படும் இந்த தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் இந்த தாக்குதலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்திய ராணூவம் பாகிஸ்தானுக்குள் நடத்தப்படவில்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. இந்த தாக்குதலில் சந்தேகம் இருப்பதாகவும் எனவே இதுகுறித்த ஆதாரங்களை வெளியிடும்படியும் ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியிருப்பதாவது:- பாகிஸ்தான் மண்ணில் இந்திய ராணுவம் சர்ஜிகல் ஆபரேஷன் நடத்தியது உண்மையானது என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. அது மட்டுமல்ல, அவர்கள் இது சம்பந்தமாக பல்வேறு தகவல்களை தங்கள் நாட்டு மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள்.
எனவே, இந்தியா இந்த தாக்குதல் தொடர்பான ஆதாரத்தை வெளியிட்டு, பாகிஸ்தானின் முகத் திரையை கிழிக்க வேண்டும். 28-ந்தேதி இரவு என்ன நடந்தது? என்பதை பிரதமர் மோடி வெளியிட்டு இந்தியாவின் ஆற்றலை வெளியில் தெரிவிக்க வேண்டும்.
இதேபோன்று 2008, 2009, 2011, 2013 ஆகிய ஆண்டுகளிலும் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. ஆனால், அந்த கால கட்டத்தில் எந்த தலைவரும் இதற்கு உரிமை கொண்டாடவில்லை. ஆனால், இப்போது உரிமை கொண்டாடுகிறார்கள். எனவேதான் இந்த தாக்குதல் தொடர்பான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.