பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் கவுண்ட்டவுண் தொடங்கியது
இந்தியா கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெற்றிகரமாக செயற்கைக்கொள்களை ஏவி, உலகின் கவனத்தை பெற்று வரும் நிலையில் தற்போது பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள்களைத் தாங்கிய பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் ஒன்றை ஏவவுள்ளது. இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்ட்டவுண் இன்று காலை தொடங்கியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘கார்ட்டோசாட் – 2’ என்ற செயற்கைக்கோள் பூமியை ஆராயும் நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஏவும் ‘பி.எஸ்.எல்.வி. சி–38’ (PSLV C-38) ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுண் இன்று அதிகாலை 5.29 மணிக்குத் தொடங்கிய நிலையில் இந்த கவுண்ட் டவுன் 28 மணி நேரம் நீடிக்கும் என்றும் நாளை காலை 9.29க்கு கவுண்ட்டவுன் முடிந்து ராக்கெட் விண்ணில் பாயும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டில் கொண்டு செல்லப்படும் கார்ட்டோசாட் – 2 செய்ற்கைக்கோள் பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல நோக்கத்திற்காக பயன்படும்.
712 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு விண்ணில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.