கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்டவிரோதமாக ரூ.200 கோடி பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, மனைவி தயாளு அம்மாள் உள்பட 10 பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான இந்த பரபரப்பான வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உட்பட 10 பேர் மீதும், 9 நிறுவனங்கள் மீதும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அதிக லாபம் பெற்றதற்காக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு, கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, குற்றச்சாட்டுகள் பதிவு தொடர்பான உத்தரவை தயாரிக்கும் பணி முடிவடையவில்லை. இதையடுத்து, அக்டோபர் 31ஆம் தேதி (இன்று) உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி ஒ.பி. சைனி வழக்கை ஒத்திவைத்தார்.
அதன்படி இந்த வழக்கு நீதிபதி சைனி முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகன் கனிமொழி, அமிர்தம், ஷாகித்பாவ்லா, வினோத் கோயங்கா, சரத்குமார் உள்பட 10 பேர் மீதும், கலைஞர் தொலைக்காட்சி உள்பட 9 நிறுவனங்கள் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நவம்பர் 11ஆம் தேதி முதல் இந்த வழக்கின் விசாரணை தொடங்கும் என்றும் நீதிபதி சைனி அறிவித்துள்ளார்.