3வது இரட்டை சதம்: ரோஹித் சர்மாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா ருத்தரதாண்டவம் ஆடி 208 ரன்கள் குவித்தார். இவருக்கு டுவிட்டரில் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அடிக்கும் மூன்றாவது இரட்டை சதமாகும். ரோஹித் ஷர்மா, முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 208 ரன்களும், 2014-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 264 ரன்களும் எடுத்துள்ளார்.
ரோஹித் ஷர்மா தவிர இந்தியாவின் சேவாக், சச்சின் டெண்டுல்கர், நியூசிலாந்தின் மார்டின் குப்தில் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயில் ஆகியோரும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்துள்ளனர். கேப்டனாக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். முதல் இடத்தில் சேவாக் உள்ளார்.
ஒரே ஆண்டில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலிலும் ரோஹித் ஷர்மா மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். அவர் இந்தாண்டில் இதுவரை 6 சதங்கள் அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 9 சதங்களுடன் முதல் இடத்திலும், சவுரவ் கங்குலி 7 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மூன்ராவது இடத்தில் 6 சதங்களுடன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் உள்ளனர்.
இந்திய அணி கேப்டனாக குறைந்த போட்டிகள் முதல் சதம் அடித்தவர்கள் பட்டியலிலும் ரோஹித் சர்மா முதல் இடத்திற்கு முன்னேறினார். அவர் கேப்டனாக களமிறங்கிய 2-வது போட்டியில் சதம் அடித்துள்ளார். முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அவர் கேப்டனாக விளையாடிய முதல் போட்டியிலேயே சதம் அடித்தார்.
மூன்றாவது இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த ரோஹித் ஷர்மாவுக்கு டுவிட்டரில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரபல கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.