3 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை: சென்னையில் விடிய விடிய மழை
ஓகி புயல் காரணமாக குமரி மாவட்டம் உள்பட தென்மாவட்டங்களில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாலையில் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மேலும் கனமழை மற்றும் புயலால் பல குடிசை வீடுகள் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கனமழை காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இதேபோல் சென்னையிலும் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்தது. அண்ணாசாலை,கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி என பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்தது.