நாகாலாந்தில் தேசியவாத காங்கிரசின் 3 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்கள் கட்சியில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகாலாந்து மக்கள் முன்னணி மற்றும் பாரதிய ஜனதாவின் கூட்டணி ஆட்சி நாகலாந்தில் தற்போது நடந்து வருகிறது. 60 பேர் கொண்ட நாகாலாந்து சட்டசபையில் இந்த கூட்டணிக்கு 51 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். நாகலாந்து மக்கள் முன்னணி கட்சியின் சார்பில் 50 எம்.எல்.ஏக்களும், பாரதிய ஜனதாவின் சார்பில் ஒரு எம்.எல்.ஏவும் உள்ளனர்.
இந்நிலையில், 4 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 3 எம்.எல்.ஏ.க்கள் திடீரென பாரதிய ஜனதாவில் இணைந்தனர். இதனால் நாகலாந்து சட்டசபையில் பா.ஜ.க.வின் பலம் 4 ஆக உயர்ந்துள்ளது. தேசியவாத காங்கிரஸின் பலம் 1ஆம் குறைந்தது.
கட்சிமாறிய எம்.எல்.ஏக்கள் இம்திலெமா சங்தாம், டி.எம்.லோதா, மோன்லுமோ கிகோன் ஆகியோர் தலைநகர் கொகிமாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்கள். அப்போது ”நாகாலாந்து ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவதற்காகவே நாங்கள் கட்சி மாறியுள்ளோம். எங்களுக்கு உரிய மரியாதை பாஜகவில் கிடைக்குமென நம்புகிறோம் என்றுதெரிவித்தனர்.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும் அந்த கட்சி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.