சென்னையை சேர்ந்த சித்தா மருத்துவ மாணவர்கள் சென்ற கார் ஒன்று காஞ்சிபுரம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சித்தா மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், தங்கள் நண்பர் ஒருவரின் தந்தை இறந்துவிட்டதால் அவருடைய இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு விட்டு, தாராபுரத்தில் இருந்து வாடகைக்கார் ஒன்றில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அவர்களது கார், சின்னையன்சத்திரம் என்ற இடத்தில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது மோதியதால் கார் அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தில் சேலத்தைச் சேர்ந்த யுவராஜ், நெல்லையைச் சேர்ந்த ஐயப்பன் ஆகிய இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சுபாஷ் என்ற மாணவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும், பாலகிருஷ்ணன், மோகன்ராஜ் ஆகிய இரண்டு மாணவர்கள் படுகாயங்களுடன் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக சென்னை சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.