பணம் கேட்டு கல்லூரி நிர்வாகம் டார்ச்சர். கள்ளக்குறிச்சியில் 3 மாணவிகள் தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் என்ற பகுதியில் இயங்கி வந்த தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூயில் பயின்ற 2-ம் ஆண்டு இயற்கை மருத்துவ மாணவிகளான மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் நேற்று கல்லூரிக்கு எதிரே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்கொலைக்கு முன் மாணவிகள் எழுதிய கடிதத்தில் கல்லூரி நிர்வாகம் தங்களிடம் அளவுக்கு அதிகமாக பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், ஏற்கனவே 6 லட்சம் ரூபாய் கல்விக் கட்டணம் கட்டியுள்ள நிலையில் மேலும் மேலும் 5 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கல்லூரி நிர்வாகம் பணம் கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.,
இந்நிலையில் இந்த தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூரிக்கு சீல் வைக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அவருடைய உத்தரவின்பேரில் விழுப்புரம் துணை ஆட்சியர் பத்ரிநாத் மற்றும் காவல்துறையினர் தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூரிக்கு சீல் வைத்துள்ளனர். மேலும், கல்லூரியின் விடுதிக்கும் அதிகாரிகள் சீல் வைத்ததால், கல்லூரியில் தங்கி படித்து வந்த மாணவ, மாணவிகள் தங்களது வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.
3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில். கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
Chennai Today News: 3 students suicide in Kallakurichi college