30% ஊழியர்களை கூடுதலாக பணிக்கு எடுக்க பிளிப்கார்ட் திட்டம்
இ-காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலாக 20 முதல் 30 சதவீதம் ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதாக தெரிவித்துள்ளது. போட்டி நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல் 600 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கும் முடிவை எடுத்திருக்கும் சூழலில், கூடுதல் பணியாளர்களை எடுக்க பிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது.
பெங்களூரை மையமாக கொண்டு இயங்கி வரும் பிளிப்கார்ட் நிறுவனம் அமேசான் நிறுவனத்தோடு போட்டியிட்டு வருகிறது. இந்திய சந்தையில் யார் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியைச் சமாளிக்கும் விதமாக அதிகமான ஊழியர்களை இந்த ஆண்டு பணிக்கு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பிளிப்கார்ட் நிறுவ னத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி நிதின் சேத் கூறியதாவது: இந்த வருடத்தில் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப ஊழியர்களைப் பணிக்கு எடுக்க திட்டமிட்டு வருகிறோம். கடந்த ஆண்டை விட 2017-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதலான ஊழியர்களைப் பணிக்கு எடுப்போம் என்று எதிர்பாக்கிறோம். பெரும்பாலும் முன் அனுபவம் உள்ளவர்களைப் பணிக்கு எடுக்க திட்டமிட்டுள்ளோம். பிளிப்கார்ட் நிறுவனத்தை அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் ஊழியர்களை எடுக்க இருக்கிறோம். இவ்வாறு நிதின் சேத் தெரிவித்தார்.
ஆனால் கடந்த ஆண்டு எவ்வளவு நபர்களை எடுத்தீர்கள், இப்போது கூடுதலாக தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை ஆகிய தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு நிதின் சேத் பதிலளிக்கவில்லை.
கடந்த ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனம் 1,500 ஊழியர்களைப் பணிக்கு எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக 10,000 தற்காலிக ஊழியர்களை பிளிப்கார்ட் நிறுவனம் பணிக்கு எடுத்தது. இவர்கள் பெரும்பாலும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்காக எடுக்கப் பட்டவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.