30 வயதிற்கு மேல் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்

30 வயதிற்கு மேல் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்

வீட்டு பிரச்சனையில் இருந்து அலுவலக பிரச்சனை வரை அனைத்தையும் தனியாகவே சமாளித்து வெற்றி காண்பவர்கள் பெண்கள். ஆனால், அவர்கள் தங்களது உடலின் மீது மட்டும் அக்கரை எடுத்துக்கொள்வதே இல்லை. ஒவ்வொரு பெண்ணும் பூப்பெய்திய காலம் முதல் நிறைய ஹார்மோன் மாற்றங்களை சந்தித்து வருகின்றனர்.

அதுவும் குறிப்பாக கர்ப்பக் காலத்தில் அவர்கள் நிறைய வலியைப் பொறுத்துக் கொண்டாலும் அதில் சந்தோஷம் தான் அடைகின்றனர். பின்னர், மாதவிலக்கு நின்ற பிறகும் பல பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர்.

பெண்கள் அனைவரும் 30 வயது அடைந்ததும் தங்களது உடலின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். அப்படி எடுத்துக் கொண்டால் நிறைய நோய்களை சுலபமாக தடுத்துவிடலாம்.

இதனால் எதிர் காலத்தில் எந்த கடுமையான நோயும் ஏற்படாமல் நலமுடன் வாழலாம். அப்படி பெண்கள் நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய மருத்துவ பரிசோதனைகளைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

பெண்கள் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளில் ஒன்று தான் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பது. அப்படி உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக மின் ஒலி இதய வரைவு எனும் யகோகார்டியோகிராம் செய்து உங்களது இருதய ஆரோக்கியத்தைப் பரிசோதித்துப் பார்ப்பது அவசியம். ஏனெனில், உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இருதய பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

பரிசோதனை போன் டென்ஸிட்டி எனும் எலும்பு அடர்த்திக்கு வைட்டமின் டீ மிக அவசியம். வைட்டமின் டீ சத்து குறைவாக இருந்தால் அவர்களின் எலும்பு பலவீனமாக இருக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்பட வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகம் இருக்கும். எனவே, எலும்பு அடர்த்தி பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் பெண்களில் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த தைராய்டு. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஹைபர் தைராய்டு, மற்றொன்று ஹைபோ தைராய்டு. கை கால்களில் வலி, மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் போன்றவை ஹைபோ மற்றும் ஹைபர் தைராய்டின் அறிகுறிகளாகும். எனவே, 30 வயதை கடந்த பெண்கள் அனைவரும் தைராய்டு பரிசோதனை செய்தே ஆக வேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் நீரிழிவு நோய் பொதுவான நோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக குண்டாக இருக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 30 வயதை அடைந்த பெண்கள் நிச்சயம் இந்த பரிசோதனையை மேற்கோள்வது அவசியம். இல்லையென்றால், இது கர்ப்பக் காலத்தில் ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.

பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயைத் தடுக்க மேமொகிராம் பரிசோதனை தான் உதவுகிறது.

சாதாரணமாக இதனை 40 வயதிற்கு மேல் தான் பரிசோதிக்கக் கூறுவார்கள். ஆனால், அதற்கு முன்பே ஏதேனும் அறிகுறி தோன்றினால் 30 வயதிலேயே செய்துக் கொள்வதன் மூலம் ஆபத்து ஏற்படாமல் தடுக்கலாம் அல்லவா…

எல்லாப் பெண்களும் 30 வயதிற்கு மேல் நிச்சயம் இந்த பேப் ஸ்மியர் சோதனை செய்தே ஆக வேண்டும். இந்த பரிசோதனை செய்துக் கொள்வதால் கர்ப்பப்பை வாய் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

பெண்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய புற்றுநோய்களில் ஒன்று தான் இந்த கர்ப்பப்பை வாய் புற்று நோய். எனவே, இதனை மறக்காமல் பரிசோதித்துப் பாருங்கள்

பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான நோய்களில் ஒன்று தான் இந்த இரத்த சோகை. குறிப்பாக கர்ப்பக் காலத்தில் இந்த பிரச்சனை ஏற்படக்கூடும். எனவே, 30 வயதை அடைந்ததும் இரத்த சோகை உள்ளதா என்று ஒரு இரத்த பரிசோதனை செய்துப் பார்த்துவிடுங்கள்.

Leave a Reply