டாஸ்மாக் கடைகளில் ஜெயலலிதா படம் மாட்டும் போராட்டம். 30 பேர் கைது
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி கடந்த சில மாதங்களாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்த போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் முதல்வர் ஜெயலலிதா படம் மாட்டியிருப்பதை போல டாஸ்மாக் கடைகளிலும் முதல்வர் படத்தை மாட்ட வேண்டும் என்ற நூதனமான போராட்டத்தை சிதம்பரம் காங்கிரஸார் நேற்று நடத்தினர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம், வல்லம்படுகை, காட்டுமன்னார் கோவில் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஜெயலலிதா படத்தை மாட்டும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 30 பேர் நடத்தினர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீஸார் எச்சரிக்கை செய்தும் அவர்கள் தொடர்ந்து முதல்வர் படத்தை மாட்ட முயன்றதால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரத்தில் நேற்று காலை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் விஜயசுந்தரம் தலைமை யில் நகர தலைவர் நூர்அலி, நிர்வாகி ரத்தினம் உள் ளிட்டோர் ஜெயலலிதா படத்தை எடுத்துக் கொண்டு சின்னகடைத் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையை நோக்கி கூட்டமாக சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி சுந்தரவடிவேலு மற்றும் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் லாமேக் தலைமையிலான போலீஸார் அவர்களை வழியில் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதேபோல், வல்லம்படுகை யில் வட்டாரத் தலைவர் புவனேஷ் தலைமையில் டாஸ்மாக்கில் ஜெயலலிதா படத்தை மாட்ட முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர். காட்டு மன்னார்கோவில் பகுதியில் வட்டாரத் தலைவர் இளங்கீரன் தலைமையில் 40க்கும் மேற்பட் டோர் டாஸ்மாக்கில் ஜெயலலிதா படத்தை மாட்ட முயற்சி செய்த போது போலீஸார் அவர்களை தடுத்து திருப்பி அனுப்பினர். காங்கிரஸ் கட்சியினர்களின் இந்த நூதன போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.