இந்திய அஞ்சல்துறை ஏ.டி.எம் சேவையில் இறங்க உள்ளது. நாடு முழுவதும் சுமார் 3000 ஏ.டி.எம் சென்டர்களை திறக்க முடிவு செய்யபட்டுள்ளது. மேலும் இதுதவிர 135,000 சிறிய வகை ஏ.டி.எம்களை உருவாக்கவும் அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.
இந்திய அஞ்சல்துறை செயலாளர் பத்மினி கோபிநாத் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் சென்னை, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் மூன்று ஏ.டி.எம்கள் திறக்கப்பட உள்ளன.
2014ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 1000 ஏ.டி.எம்களும், அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குள் 3000 ஏ.டி.எம்களும் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அஞ்சல் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள சுமார் 26 கோடி வாடிக்கையாளர்கள் இந்த ஏ.டி.எம்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.
வங்கி வாடிக்கையாளர்களும் இந்த ஏ.டி.எம்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், இந்திய அஞ்சல்துறை சார்பில் வங்கிகள் திறக்க இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் இந்திய அஞ்சல்துறையின் வங்கி நாடு முழுவதும் திறக்கப்படும் என்றும் பத்மினி கூறினார்.