பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் பலர் பலத்த காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பீகார் மாநிலத்தின் தலைநகரில் உள்ள பாட்னாவின் காந்தி மைதானத்தில் தசரா விழா பெரும் உற்சாகத்தோடு நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொள்ள பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இந்நிலையில், விழா முடிந்து அனைவரும் திரும்பியபோது ஏற்பட்ட திடீரென கூட்ட நெரிசலில் பலர் சிக்கியதால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதாக பீகார் உள்துறை செயலாளர் அமிர் சுபானி தெரிவித்துள்ளார். இதில் பலர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்த அனைவரும் பாட்னா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.