336 ஊழியர்களை திடீரென வீட்டுக்கு அனுப்பியது டுவிட்டர். பெரும் பரபரப்பு
ஃபேஸ்புக் இணையதளத்தை அடுத்து சமூக வலைத்தளத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கும் டுவிட்டர், செலவுகளை குறைக்க 336 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்துள்ளது. இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
டுவிட்டர் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான ஜாக் டோர்சி, தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ.) கடந்த வாரம் பதவியேற்றார். பதவியேற்ற ஒரே வாரத்தில், 8 சதவிகித ஊழியர்களை அதாவது 336 ஊழியர்களை நேற்று திடீரென வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இந்த நடவடிக்கை மற்ற ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ நகரில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட டுவிட்டர் நிறுவனம், சக போட்டியாளர்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கைத் தாண்ட முடியாமல் தவித்து வருகிறது. இதனால், புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றிருக்கும் ஜாக், அந்நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் விதமாகவும், நிறுவனத்தை மேம்படுத்தும் எண்ணத்திலும் 336 பணியாளர்களை திடீரென பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு, அந்த நிறுவனம் அலுவலக மெயில் மூலமாக தகவல் அனுப்பியுள்ளது. ஆனாலும், அந்த மெயிலை அவர்கள் திறந்து பார்க்கும் முன்பே அந்த மெயிலை உபயோகிக்கும் வசதியை டுவிட்டர் நிறுவனம் நிறுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் டுவிட்டரை உபயோகிக்கும் பயனாளிகள் கடந்த பல மாதங்களாக 30 கோடியிலேயே உள்ளது. பயனாளிகளை உயர்த்தாமல் நிறுவனத்தை முன்னேற்ற முடியாது என்பதால் முதல்கட்டமாக செலவுகளை குறைக்க இந்த அதிரடி நடவடிக்கையை தற்போது ஜாக் டோர்சி எடுத்துள்ளார்.