பல வருடங்களுக்கு பின்னர் ஸ்ரீதேவி ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற பெண் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்வு செய்து ரீ எண்ட்ரி ஆனது போல, ஜோதிகா எட்டு வருடங்களுக்கு பின்னர் அதே பாணியில் ரீ எண்ட்ரி ஆகியுள்ளார். ஜோதிகாவை அழகாக பார்த்து ரசித்த நம்மூர் ரசிகர்கள் முழுக்க முழுக்க சேலையுடன் குடும்பப்பாங்கான வேடத்தில் ரசிப்பார்களா. என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மலையாளத்தில் வெளிவந்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படம் கேரளாவில் வெற்றி பெற ஒரு முக்கிய காரணம், அந்த படத்தின் நாயகி மஞ்சுவாரியர் உண்மையாகவே கணவரால் பாதிக்கப்பட்டு விவாகரத்து பெற்ற நேரத்தில் இந்த படம் வெளிவந்ததுதான். ஆனால் சூர்யாவுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வரும் ஜோதிகாவை, கணவனுடன் சண்டை போடும் ஒரு கேரக்டரில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற சந்தேகம் வலுக்கின்றது.
எப்போதும் தன்னை மட்டந்தட்டிக்கொண்டே இருக்கும் சராசரி கணவன், அடிக்கடி தன்னிடம் கோபித்துக்கொள்ளும் மகள் ஆகியோர்களுடன் வாழ்ந்து வரும் ஜோதிகாவுக்கு அரசு வேலையும் உண்டு. தானுண்டு தனது வேலையுண்டு என்று கணவனுக்காகவும், மகளுக்காகவும், வாழ்ந்து வரும் ஜோதிகாவில் வாழ்க்கையில் திடீர் திருப்பமாக கணவன் ரகுமானும், மகள் அமிர்தாவும் அயர்லாந்து செல்கின்றனர். ஜோதிகா உடனடியாக அவர்களுடன் செல்ல முடியாத நிலை ஏற்படுவதால் தனிமையில் தவிக்கப்படுகிறார்.
யாருக்குமே பிரயோஜமில்லாமல் வாழ்ந்து வருவதாக நினைத்து கொண்டிருக்கும் ஜோதிகாவின் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறார் கல்லூரி கால தோழி அபிராமி. அபிராமியின் அறிவுரையால் தன்னையே தட்டி எழுப்பிக்கொண்ட ஜோதிகா, ஏதாவது செய்து சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருக்கும்போது தான் ஆர்கானிக் காய்கறி ஆர்டர் கிடைக்கின்றது. மொட்டை மாடியில் ஆர்கானிக் காய்கறிகளை தான் மட்டுமின்றி தனது பக்கத்து வீட்டுக்காரர்களையும் உற்பத்தி செய்ய வைத்து கடைசியில் ஜனாதிபதியே போற்றும் அளவுக்கு உயர்கிறார். மனைவியை மட்டம் தட்டிய கணவர் ரகுமானும், மகள் அமிர்தாவும் ஜோதிகாவை பாராட்டுகின்றனர். இதுதான் கதை
முழுக்க முழுக்க பெண்களை உயர்த்தி சொல்வதற்காகவே எடுக்கப்பட்ட படம் என்பதால் ஆண்களை மட்டம் தட்டம் வசனம் அதிகம். எல்லா ஆண்களுமே கெட்டவர்கள் என்ற நோக்கத்திலேயே படம் எடுத்திருப்பதாக தெரிகிறது. மனைவியை மதிக்கத்தெரிந்த நல்ல கணவர்களும் உண்டு என்பதை காண்பிக்க படத்தில் ஒரு காட்சி கூட இல்லை. சூர்யா என்ற கணவர் இருந்ததால்தான் இந்த படமே உருவாகியது என்பதை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜோதிகாவின் நடிப்பில் குறையில்லை. சின்னச்சின்ன எக்ஸ்பிரஷன்களையும் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் முகத்தில் முதிர்ச்சி தெரிகிறது. கணவர் ரகுமான் தன்னை மட்டந்தட்டியபோதிலும், அயர்லாந்தில் வேலைக்காரி கிடைக்கவில்லை என்பதால் அழைத்து போக வருவதாக ரகுமான் சொல்லும்போது வெகுண்டு எழும் காட்சியில் ஜோதிகா அருமையாக நடித்துள்ளார்.
ஜோதிகாவின் கணவராக நடித்திருக்கும் ரகுமான், ஜோதிகாவிடம் இருந்து பத்தடி ஏன் விலகியே இருக்கின்றார் என்பது தெரியவில்லை. ஒருவேளை சூர்யா படப்பிடிப்பில் இருந்திருப்பாரோ என்னமோ?
மகளாக நடித்திருக்கும் அமிர்தா, டீன் ஏஜ் குழந்தைகளின் சேட்டைகள், கோபம் ஆகியவற்றை சரியாக செய்துள்ளார். மேலும் டெல்லி கணேஷ், நாசர், அபிராமி, தேவதர்ஷினி என அனைவரும் தங்கள் கேரக்டர்களை உணர்ந்து நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணனின் இசையில் வாடி ராசாத்தி பாடல் அருமை என்றாலும் இந்த பாடலை இன்னும் நன்றாக படமாக்கியிருக்கலாம். ஒளிப்பதிவு எடிட்டிங், இயக்கம் என தொழில்நுட்ப கலைஞர்கள் யாரையும் குறைகூற முடியாது.
தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பது இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மட்டும்தான். ஆனால் இந்த இருதரப்பினர்களுக்கும் இந்த படம் சுத்தமாக பிடிக்காது. எனவே வசூல் ரீதியாக இந்த படம் வெற்றியா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும் நல்ல கருத்துக்களை சமூகத்திற்கு சொல்ல வந்த படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.