தற்போது சென்னை உள்பட அனைத்து மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னையில் மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 203 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காலையில் இட்லி, மற்றும் பொங்கல், மதியம் தயிர்சாதம்,எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம், சாம்பார் சாதம் மற்றும் இரவில் சப்பாத்தி ஆகியவை மிகக்குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றை ஏழை எளிய மக்கள் வாங்கி சாப்பிட்டு பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த அற்புதமான திட்டம் பிற நகர்ப்புற மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்தகட்டமாக ஏற்கெனவே அம்மா உணவகங்கள் நிறுவப்பட்ட மதுரை, வேலூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி தவிர்த்து, ஏனைய மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் தலா ஒன்று வீதம் 27 அம்மா உணவகங்கள், 124 நகராட்சிகளில் 129 அம்மா உணவகங்கள்; திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சிகளில் தலா ஒன்று வீதம், 2 அம்மா உணவகங்கள்; கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகராட்சிகளில் கூடுதலாக தலா ஒன்று வீதம் 2 அம்மா உணவகங்கள் என மொத்தம் 360 புதிய அம்மா உணவகங்களை கூடியவிரைவில் திறக்க இன்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் கூடுதலாக தலா ஒரு அம்மா உணவகம் வீதம், 200 அம்மா உணவகங்களும் அடங்கும்.
எனவே ஏற்கெனவே தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அம்மா உணவகங்களுடன், இவற்றையும் சேர்த்து, மொத்தம் 654 அம்மா உணவகங்கள் மக்களின் தேவையை நிறைவு செய்யும் என முதல்வர் கூறியுள்ளார்.